அரூர் நான்கு ரோட்டில் மின்வாரிய அலுவலகம் அருகில் மரத்தடியில் இருந்த குப்பைகளுக்கு தீ வைத்த போது, புளிய மரம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

தருமபுரி மாவட்டம் அரூர் நான்கு ரோடு சந்திப்பில் மின்சார வாரிய அலுவலகம் அமைந்துள்ளது. இந்த மின்சார வாரிய அலுவலகம் முன்பு உள்ள மரத்தடியில் உணவகங்கள் உள்ளிட்ட கடைகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி விடுகின்றனர். இந்நிலையில் தினந்தோறும் குப்பைகளை சேகரிக்க வரும் துப்புரவு பணியாளர்கள் சேகரிக்கப்படும் குப்பைகளை தவிர்த்து, மீதமுள்ள குப்பைகளுக்கு அந்தந்த தெருக்களில் காலியாக உள்ள இடங்களில் தீ வைத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள், மின்சார வாரிய அலுவலகம் முன்பு இருந்த புளிய மரத்தடியில் உணவகங்களில் இருந்து கொட்டப்பட்ட குப்பைகளுக்கு தீ வைத்து விட்டு சென்றுள்ளனர். ஆனால் இந்த குப்பைகள் முழுவதும் எறிந்ததில், அருகில் இருந்த புளிய மரத்தில் தீ பிடித்தது. பழங்காலத்து புளிய மரம் என்பதால், மரத்திற்கு இடையில் பெரிய பொந்து இருந்தது. இதில் தீ முழுவதுமாக பரவி புளியமரம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.



 

எப்பொழுதும் பொதுமக்கள் வந்து செல்லும் பரபரப்பாக உள்ள நான்கு ரோடு சாலை சந்திப்பில் திடீரென புளியமரம் தீப்பிடித்து எரிந்த உடன் சாலையை பயன்படுத்துகின்ற பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் தீயணைப்பு துறையினர் வருவதற்குள் மரம் முழுவதுமாக தீப்பிடித்து கொழுந்துவிட்டு ஏரிய தொடங்கியது. மேலும் தீ அதிகரித்ததால், அருகிலேயே மின்மாற்றி இருப்பதால், பொதுமக்கள் மத்தியில் ஒரு பதட்டம் ஏற்பட்டது. ஆனால் தீயணைப்புத் துறையினர்கள் விரைந்து வந்து புளிய மரத்தில் கொழுந்து விட்டு எரிந்து வந்த, தீயை அணைத்து அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு கட்டுப்படுத்தினர். அரூர் பேரூராட்சியில் உள்ள துப்புரவு பணியாளர்கள் பெரும்பாலான குப்பைகளை வாகனங்களில் எடுத்துச் செல்லாமல், தெருக்களில் காலியாக உள்ள இடங்களில் வைத்து எரித்து விட்டு செல்கின்றனர். ஆனால் ஒரு சில இடங்களில் குப்பைகள் முழுவதும் எரியாமல், நாள் முழுவதும் புகைமூட்டமாகவும் இருந்து வருகிறது. அதே போல் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படுகின்ற குப்பைகள் முழுவதுமாக எரியாமல், காற்றுக்கு தெருக்களில் பரவி வருவது முகம் சுழிக்கும் வகையில் இருந்து வருகிறது. எனவே பேரூராட்சி நிர்வாகம் துப்புரவு  பணியாளர்களுக்கு, குப்பைகளை சேகரித்து ஒரே இடத்தில் வைத்து எரிப்பதற்கு அறிவுறுத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.