தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த இருமத்தூர் ஊராட்சி டொக்கம்பட்டி பொது மயானத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைப் பாடையுடன், நூதன முறையில் கிராம மக்கள் மனு கொடுக்க வந்தனர்.

 

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த இருமத்தூர் ஊராட்சிக்குட்பட்ட டொக்கம்பட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில், உள்ள மக்கள் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய மையானத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது‌. இதனை கால காலமாக கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கிராமமக்கள் பயன்படுத்தி வந்த மையான நிலத்தினை அதே ஊரை சேர்ந்த அதிமுக நிர்வாகி  எம். கே. மகாலிங்கம் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து வந்துள்ளார். இதனை கிராமத்தில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து, ஊருக்கே பொதுவான சுடுகாட்டு நிலத்தை இப்படி அபகரித்து கொள்வது நியாயம் தானா என அதிமுக நிர்வாகியிடம் முறையிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் யாரவது உயிரிழந்தால், அவர் அவரது வீடுகளிலேயே புதைத்து கொள்ளுங்கள். இங்கே என்னிடம் யாரும் வரக்கூடாது என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.



 

மேலும் கிராம மக்கள் மயான நிலத்தை மீட்டு தரக்கோரி சம்மந்தபட்ட துறை வருவாய் அதிகாரிகள், கம்பைநல்லூர் காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர். ஆனால் கிராமமக்கள் கொடுத்த மனுக்களின் மீது இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அரசின் கவனத்தை ஈர்த்து மையானத்தை ஆக்கிரமிப்பில் இருந்து  மீட்க வேண்டும் கிராமமக்கள் முடிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுலகத்திற்கு புகார் மனு கொடுக்க ஊரே திரண்டு வந்தனர். அப்போழுது தங்களது கோரிக்கை நிறைவேறும் வகையில், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக, கைப்பாடை கட்டி, இறந்தவர் உடலை தோளில் சுமந்தபடி, பாடையை ஊர்வலமாக எடுத்து வந்து  நூதன முறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். அப்பொழுது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து ஒரு சிலர் மட்டுமே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். மேலும் தங்களது மனு மீது மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால், அரசு கொடுத்த ஆவணங்களான ரேசன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அரசிடமே திரும்ப ஒப்படைக்க போவதாகவும் தெரிவித்தனர்.