தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த காளி கவுண்டன் கொட்டாய் அருகே, உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமத்திற்குள் நுழைந்து வந்த 2 குட்டிகள் உள்ளிட்ட 5 யானைகள் கூட்டம், கடந்த சில நாட்களுக்கு முன்பு சோளக்கொல்லையில் சட்ட விரோதமாக வைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி 2 பெண் யானைகள் மற்றும் ஒரு மக்னா யானை என மூன்று யானைகளும் பரிதாபமாக உயிரிழந்தது. இந்நிலையில் தாயை இழந்த இரண்டு குட்டி யானைகளும் அதே பகுதியில் சுற்றி சுற்றி வந்தது. இந்த இரண்டு குட்டி யானைகளையும், யானைக் கூட்டங்களுடனோ அல்லது முகாமிற்கு பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து வனத் துறையினர் இரண்டு குட்டி யானைகளையும் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இரண்டு குட்டி யானைகளும் தாயி இறந்த இடத்திற்கு பிளிர்ந்து கொண்டே சுற்றி சுற்றி வந்தது. 



 

ஆனால் தாயை இழந்த குட்டி யானைகள் அதிக பாய்ச்சலில் ஆவேசமாக சுற்றி திரிந்ததால், குட்டிகளை பிடிக்க முடியாமல் வனத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இரண்டு குட்டி யானைகளும் கல்லாகரம் பகுதியில் இருந்து இரண்டு நாட்களுக்கு பிறகு வேறு இடத்தை நோக்கி நகர்ந்து உள்ளது. தற்பொழுது தாய் உயிர் இழந்த இடத்திலிருந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் கடந்து, அத்திமுட்லு சிவன் கோவில் அருகில் உள்ள வனப் பகுதிக்குள் நுழைந்துள்ளது. ஆனால் யானை குட்டிகள் வனப் பகுதிக்குள் நுழைந்தாலும், அதனை பாதுகாப்பாக வனத் துறையினர் பின் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் மற்ற யானைகளைப் போல வாழைப்பழம், வாழை இலை உள்ளிட்ட சாதாரணமாக உணவை கொண்டு வந்தாலும், நீதிமன்ற உத்தரவு இருப்பதால், யானையை பாதுகாப்பாக மீட்க வேண்டும் என்ற நோக்கத்தில் வனத் துறையினர் கடந்த ஐந்து நாட்களாக யானை நடமாட்டத்தையும், உணவு உண்பதையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.



 

மேலும் குட்டி யானைகள் சாதாரண உணவை உண்பதால் நீதிமன்றம் மூலம் அடுத்த உத்தரவு வரும் வரை இந்த யானைகளை பிடிப்பதற்கோ, வனப் பகுதியில் விரட்டுவதற்கு முடிவு எடுக்காமல், அதன் நடமாட்டத்தை மட்டும் வனத் துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் யானையின் செயல்பாடுகள் குறித்து நீதிமன்றத்திற்கும், துறை அதிகாரிகளுக்கும் தெரிவித்த பிறகு, கிடைக்கின்ற உத்தரவையடுத்து, அடுத்த கட்டமான முயற்சிகளை மேற்கொள்ள வனத் துறையினர் திட்டமிட்டு வருகின்றனர்.