தருமபுரி எஸ்பி உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு செல்லும் முக்கிய சாலையில் குப்பைகளை கொட்டி, சுத்தம் செய்யாததால், சாலையில் சிதறி துர்நாற்றம் வீசுகிறது. இதனால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டி ஊராட்சியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த ஊராட்சியில் தான்,  மாவட்டத்தின் முக்கிய அலுவலகங்களான மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட எஸ்பி அலுவலகம், தீயணைப்பு துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகம், நெடுஞ்சாலை பொறியாளர் அலுவலகம்  உள்ளிட்டவைகள் உள்ளது. இந்த அலுவலகங்கள் அனைத்தும் சேலம் தருமபுரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும், தருமபுரி மாவட்டத்திலிருந்து மக்கள் தங்களுடைய புகார்களை தெரிவிக்க தினந்தோறும் எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். 

 



 

இந்த பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அலுவலகத்திற்கு எதிரே தினம் தோறும் அப்பகுதியில் உள்ள மக்கள் குப்பையை கொட்டி வருகின்றனர். இதனால் தினமும் தூய்மை பணியாளர்கள் சுத்து செய்து வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக தூய்மை பணியாளர்கள், இதனை சுத்தம் செய்ய வருவதில்லை. இதனால் குப்பைகள் தேங்கி, குப்பை தொட்டி முழுவதும் நிரம்பியுள்ளது. இதனால் குப்பைகள் சாலையில் சிதறி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

 



 

மேலும், தருமபுரி எஸ்.பி. அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்க செல்லும் பொதுமக்கள், அரசு அதிகாரிகள், குடியிருப்பு பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் என அனைவரும் முகம் சுழித்து வருகின்றனர். மேலும், எஸ்பி அலுவலகத்திற்கு எதிரே உள்ள தனியார்களின் வணிக வளாகத்தில் இருந்து தினந்தோறும் வெளியேற்றப்படும் கழிவுநீர், எஸ்பி அலுவலகத்திற்கு முன் உள்ள கழிவுநீர் கால்வாய் வழியாக சென்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் கட்டிடத்தை ஒட்டி தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை இலக்கியம்பட்டி ஊராட்சியில் நுகர் பொருள் வாணிப கழகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று புகார் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை அகற்றியும்,  அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயை தூர்வாரி, கழிவுநீர் தேங்கி நிற்காமல் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மேலும் இதுகுறித்து மாவட்ட திட்ட அலுவலர் பாபுவிடம் கேட்டபோது, இதுகுறித்த புகார் எதுவும் எங்களுக்கு யாரும் தெரிவிக்கவில்லை. தற்போது உடனடியாக தூய்மை பணியாளர்களை அனுப்பி, குப்பைகளை  அப்புறப்படுத்தி, அந்த இடத்தில் கிருமி நாசினி தெளிக்கப்படும். மேலும் இந்த பகுதியில் இனி தினமும் தவறாமல், தூய்மை பணியாளர்கள் சுத்தும் செய்வார்கள் என தெரிவித்தார்.