ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பரிசல் பயணத்திற்கான பாதுகாப்பு உடைகள் முழுவதும் எரிந்ததால், கடந்த 25 நாட்களாக பரிசல் பயணம் நிறுத்தப்பட்டுள்ளது. பரிசல் பயணம் மேற்கொள்ள முடியாததால் ஒகேனக்கல் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும், வருவாய் இல்லாமல் பரிசல் ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வந்து ஆயில் மசாஜ் செய்து, அருவியில் குளிப்பது, பரிசல் பயணம் சென்று அருவியின் அழகை கண்டு ரசிப்பது, மீன் உணவு சமைத்து உண்டு மகிழ்ந்து செல்வது வழக்கம். இந்த ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை நம்பி ஆயில் மசாஜ், பரிசல் ஓட்டிகள், சமையல், மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் என 2,500 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பரிசலில் செல்ல நான்கு பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. பரிசலில் பயணம் சென்று அருவிகளை கண்டு ரசிக்க விரும்புவார் 750 ரூபாய் கட்டணம் செலுத்தி பாதுகாப்பு உடைப்பு ஏற்று நான்கு பேர் மட்டுமே பரிசலில் பயணம் செய்ய மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இந்நிலையில் ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று அருவியின் அழகை கண்டு ரசிப்பது, சாரலில் நனைவது போன்ற பரிசல் பயணத்தை மட்டுமே அதிகமாக விரும்பி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரிசல் துறையில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு உடைகளில் இரவில் மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் பரிசல் பயணத்திற்காக வைக்கப்பட்டிருந்த 2000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு உடைகள் முழுவதும் எரிந்து நாசமானது.
இதனால் பாதுகாப்பு உடைகள் முழுவதும் எரிந்ததால், பரிசல் பயணம் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் 200க்கும் மேற்பட்ட பாதுகாப்பு உடைகளை இருக்கிறது. ஆனால் இந்த பாதுகாப்பு உடைகள் 500 பரிசல்களுக்கு தேவையான அளவு இல்லை என்பதால் பரிசல் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 25 நாட்களாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் வரும் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செல்ல முடியாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மேலும் பரிசல் சவாரியை நம்பி உள்ள பரிசல் ஓட்டிகள் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
தொடர்ந்து வருவாய் இல்லாமல் தவித்து வரும் பரிசல் ஓட்டிகள் மாவட்ட நிர்வாகத்திடம் விரைந்து பாதுகாப்பு உடைகளை வாங்கித் தருமாறு முறையிட்டுள்ளனர். ஆனால் வாங்கி தருகிறோம் என்று, இன்று, நாளை என காலம் தாழ்த்தி தற்பொழுது 26 நாட்களை கடந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் பயணத்தை முழுமையாக முடிக்க முடியாமல், பரிசல் பயணம் இல்லாததால் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். அதேபோல் 25 நாட்களாக போதிய வருவாய் இல்லாமல், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் பரிசலோட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகள் மற்றும் பரிசலோட்டிகளின் நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக போதிய பாதுகாப்பு உடைகளை வழங்கி பரிசல் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும் பரிசல் ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது, பரிசல் பயணத்திற்கு தேவையான பாதுகாப்பு உடைகள் முழு முழுவதும் எரிந்து விட்டது. எனவே புதியதாக பாதுகாப்பு உடைகளை வாங்கி பரிசல் பயணத்தை தொடங்க, பரிசல் சவாரி ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் பாதுகாப்பு உடைகள் கிடைத்துவிடும். அதன் பிறகு பரிசல் இயக்க தொடங்கிய விடும் என தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்