தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே பீனி ஆற்றை ஒட்டி தனியார் மரவள்ளி அரவை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பீனியாற்றில் வருகின்ற தண்ணீரை மரவள்ளி ஆலைக்குள் ராட்சத குளம் வெட்டி தண்ணீரை நிரப்பி வருவதாகவும், கழிவு நீரை சுத்திகரிப்பு நிலையம் அமைக்காமல், ரசாயன கழிவு நீரை ஆற்றில் கலக்க விடுவதால், சுற்று வட்டாரத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் மண் வளம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை இருந்து வருவதாக விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.  இந்நிலையில் தருமபுரி மாவட்ட மாசு கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பொறியாளர் சாமுவேல் ராஜ்குமார் நேரில் ஆய்வு செய்தார். அப்பொழுது மரவள்ளி அரவை ஆலை அரசு விதிகளுக்கு புறம்பாக செயல்படுவதால், மரவள்ளி அரவை ஆலைக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 



 

இந்நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக ஜெனரேட்டர்கள் மூலமாக மீண்டும் ஆலை செயல்பட்டு வந்துள்ளது. இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் பீனி ஆறு பாசன விவசாயிகள் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்  உள்ளிட்ட 20 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் இன்று பாப்பிரெட்டிப்பட்டி தனியார் மரவள்ளி அரவை ஆலையில் ஆய்வு செய்தனர்.



 

அப்பொழுது விவசாயிகள் அளித்த புகாரின் படியே, பீனி ஆற்றிலிருந்து இருந்து ராட்சத குழாய் அமைத்து, தண்ணீர் எடுத்து வருவதும், கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல், நேரடியாக ஆற்றில் கலக்க விடுவதும் தெரிய வந்தது. அந்தப் பகுதியில் உள்ள நீரை மாசு கட்டுப்பாட்டு வாரிய ஊழியர்கள் ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். மேலும் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள நிலத்தடி நீரும், மண்வளமும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனையும் பரிசோதனை செய்ய வேண்டும் என விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர். இதனை அடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய ஊழியர்கள் இரண்டு நாட்களில் விவசாயிகள் தெரிவித்த ஒரு சில இடங்களில் தண்ணீர் மற்றும் மண்ணின் மாதிரைகளை பரிசோதனைக்காக எடுக்க திட்டமிட்டுள்ளனர். 

 

மேலும், நிலத்தடி நீர் மற்றும் மண் மாதிரி சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பப்பட்டு அதன் முடிவுகள் கிடைத்தவுடன் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இதன் பிறகு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பார் என மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா தெரிவித்தார். ஆனால் இந்த மரவள்ளி ஆலை அரசின் விதிகளுக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனை உடன நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். மேலும் பீனி ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அப்பொழுது அதிகாரிகளிடம் மரவள்ளி கிழங்கு அரவை ஆலை உரிமையாளர், அதிகாரிகளிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்பொழுது விவசாயிகளும் பேசியதால், சிறிது நேரம்  ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.