தருமபுரியில் புதுப்பிக்கப்பட்ட காதி கிராஃப்ட் விற்பனை அங்காடியினை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி இன்று திறந்து வைத்தார்.
கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திட வேண்டி, வேலை வாய்ப்புகள் வழங்கி அவர்களின் பொருளாதாரத்தை மேம்பட செய்வதையே நோக்கமாக கொண்டு தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் செயல்பட்டு வருகிறது. அதனை செயல்படுத்தும் விதமாக கிராமப்புற தொழிலாளிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் கதர் மற்றும் கிராமப்பொருட்கள் விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டு, தருமபுரி கதர் அங்காடியை 2022-23 ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் படி 11 இலட்சத்து 43 ஆயிரம் ரூபாய் செலவில் புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வகறாபனை மையத்தினை இன்று மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
தருமபுரி கதர் அங்காடியில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தால் தயாரிக்கப்படும் மென்மையான கதர், கண்கவர் பட்டு மற்றும் வண்ண வண்ண பாலியஸ்டர் இரகங்கள் மற்றும் கிராம மகளிர் சுய உதவி குழுவினர் உற்பத்தி செய்யும் பொருட்களான குளியல் சோப்பு, சலவை சோப்பு, அக்மார்க் தேன், சந்தன மாலை, பூஜை பொருட்கள் உள்ளிட்டவைகளை ஆட்சியர் பார்வையிட்டார்.
அத்துடன் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்திடும் நோக்கத்துடன் கதர் மற்றும் கிராமப்பொருட்களும் தருவிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது புதியதாக திறக்கப்பட்ட கதர் அங்காடியில் பாரம்பரிய அரிசி வகைகள், மதிப்பு கூட்டப்பட்ட தேன் வகைள், மரச்செக்கு எண்ணெய் வகைகள், அகர்பத்திகள், கற்றாழை சாம்பு, கைகழுவும் திரவம், மற்றும் திரவ சலவை சோப்பு ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தற்போது புதியதாக அனைத்து மாவட்டங்களிலுள்ள மகளிர் சுய உதவிக்குழு மற்றும் வேளாண்மைப் பொருட்களை உற்பத்தி செய்யும் அமைப்புகள் மூலம் அந்தந்த மாவட்டங்களிலும் சிறப்பு சேர்க்கும் வகையில் உண்ணும் மற்றும் உண்ணா பொருட்களை கொள்முதல் செய்து விற்பனையை விரிவுபடுத்த வேண்டும். அதேபோல் இங்கு விற்பனை செய்க படுகின்ற பொருட்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும்.
மேலும் பாரம்பரிய அரிசி வகைகளின் மேல் அதனை சமைப்பதற்குரிய வழிமுறைகளையும் தெளிவாக அச்சிட்டு வைக்க வேண்டும். மேலும் பொருட்களின் மேல் உற்பத்தி செய்யப்பட்ட தேதி மற்றும் காலாவதியாக இருக்கின்ற தேதியை சரியாக பார்த்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என விற்பனையாளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் காதி கிராப்ட் உதவி இயக்குனர் ரவிகுமார், மேலாளர்கள் பாலசுப்ரமணி, ஜெயராமன் வட்டாட்சியர் ஜெயச்செல்வன், வருவாய் ஆய்வாளர் அ.ஜெயபிரசாத் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.