கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீரால் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 60 ஆயிரம் கன அடியாக உயர்ந்ததால், பரிசலுக்கு மீண்டும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

 

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு மாத காலமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளில் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழுவதுமாக நிரம்பி வருகிறது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் கடந்த இரண்டு மாதமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல் பாறைகள், அருவிகள், தெரியாத அளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் தொடர்ந்து இரண்டு மாத காலமாக ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்து வந்தது.

 

இந்நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மலை படிப்படியாக குறைந்து வந்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. ஆனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து, தமிழகத்திற்கு நீர்த்திறப்பு என்பது வினாடிக்கு 51 ஆயிரம் கனஅடியாக நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதனால் நேற்று காலை காவிரி ஆற்றில் தமிழக எல்லை பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்த  நீர்வரத்து, மாலை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டலுவுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து, வினாடிக்கு 60 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இதனால் மீண்டும் ஒகேனக்கல்லில் பாறைகளில் மற்றும் அருவிகள் தெரியாத அளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நீர்வரத்து குறைவால் நேற்று பரிசலை இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதித்திருந்த நிலையில், இன்று நீர்வரத்து அதிகரிப்பால் மீண்டும் பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. 

 



 

மேலும், கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 41 ஆயிரம் கனஅடி குறைக்கப்பட்டுள்ளதால், நீர்வரத்து படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக மத்திய நீர்வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக ஒரு மாத காலத்திற்குப் பிறகு நேற்று பரிசல் இயக்க அனுமதி அளித்த நிலையில் மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பால், இன்று பரிசிலை மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததால் சுற்றுலா பயணிகள் மற்றும் பரிசல் தொழிலாளர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். மேலும் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், ஒகேனக்கல்லில் சுற்றுலாவை நம்பியுள்ள தொழிலாளர்கள் வருவாய் இல்லாமல் தவித்து வருகின்றனர்.