தருமபுரி மாவட்ட ஆட்சியராக ச.திவ்யதர்சினி பணியாற்றி வந்தார். இவர் சென்னை மகளிர் மேம்பாட்டு திட்ட ஆணைய அலுவலகத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் சேலத்தில் இயங்கிவரும் தமிழக பட்டு வளர்ச்சித்துறை அலுவல இயக்குனராக பணியாற்றி வந்த, கி.சாந்தி தருமபுரி மாவட்டத்துக்கு புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இவர் பட்டு வளர்ச்சி துறைக்கு முன்னதாக சேலத்தில் இயங்கும் அரசு நிறுவனமான சேகோ சர்வ் நிறுவனத்தின் இயக்குநராக பணியில் இருந்துள்ளார். இந்த நிலையில், இன்று
தருமபுரி மாவட்டத்தின் 45 ஆட்சியராக கே.சாந்தி பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் முதல் முறையாக மாவட்ட ஆட்சியராக கி.சாந்தி பதவி ஏற்றுள்ளார். தருமபுரி மாவட்டத்தில் ஆட்சியராக பொறுப்பேற்ற 7-வது பெண் ஆட்சியர். மேலும் இந்த மாவட்டத்திற்கு தற்போது தொடர்ச்சியாக 4-வது பெண் ஆட்சியர் அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியருக்கு உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த புதிய ஆட்சியர் கி.சாந்தி, தருமபுரி மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியராக இன்று பொறுப்பை ஏற்றுள்ளேன். இதற்கு முன் சேலம் பட்டு வளர்ச்சித் துறையில் இயக்குனராக பணியாற்றி வந்தேன். தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும், மாவட்டத்திலுள்ள மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன். மேலும் தமிழக அரசின் திட்டங்களை பின் தங்கிய பகுதி மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதற்கும், தகுதியுள்ள நபர்களுக்கு திட்டங்களைக் கொண்டு சேர்க்கும் வகையில் எனது செயல்பாடு அமைந்திருக்கும். அந்த வகையில் தருமபுரி மாவட்ட நிர்வாகத்தை அழைத்துச் செல்வேன்.
மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்பதற்கு முன்பாக மரியாதை நிமித்தமாக தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். அப்பொழுது ஏழை எளிய மக்கள் அன்றாடம் வந்து செல்லுகின்ற வட்டாட்சியர் போன்ற அலுவலகங்களுக்கு அடிக்கடி தணிக்கை செய்து, மக்களின் நிலுவையில் உள்ள மனுக்களின் மீது தனி கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் எனது உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி எனது பணி இருக்கும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரின் தொடர்புக்கு எண்ணுக்கு, எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். நான் மக்களோடு எந்த நேரத்திலும் இணைந்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டு பூர்த்தி செய்து கொடுப்பேன் என மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்