கர்நாடக அணைகளில் நீர் திறப்பு குறைப்பால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியில் இருந்து 12000 ஆக குறைந்தது. மேலும், பரிசல் இயக்க எட்டாவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக கர்நாடக அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில் கடந்த வாரம் கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படுகின்ற தண்ணீரை திறக்க வேண்டும் என ஆணையும் வலியுறுத்தியதன் அடிப்படையில் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் அதிகபட்சமாக வினாடிக்கு 18000 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. கடந்த இரண்டு நாட்களாக வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக இருந்து வந்தது.

 

இந்நிலையில் நேற்று முன்தினம் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 13000 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதனால் 10 நாட்களுக்குப் பிறகு காவிரி ஆற்றில் நீர் வரத்து குறைய தொடங்கியது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. மேலும் நீர்வரத்து குறைந்தாலும், ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மேலும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து எட்டாவது நாளாக தடை விதித்துள்ளது. மேலும் நீர்திறப்பு குறைக்கப்பட வாய்ப்புள்ளதால், இனி வரும் காலங்களில் நீர்வரத்து படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக மத்திய நிர்வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.