காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வந்தது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் தமிழக எல்லைக்கான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 20,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்து வருவதால், காவிரி ஆற்றில் நேற்று தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து, வினாடிக்கு 18,000 கன அடியாக இருந்தது. இன்று மேலும் நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 16,000 கன அடியாக குறைந்துள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தாலும், ஒகேனக்கல் பிரதான அருவி, ஐந்தருவி, சினி அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. தொடர்ந்து மழை விட்டு விட்டு பொழிவதால், நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வந்த நிலையில், தற்போது தொடர்ந்து நீர்வரத்து சரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.



 

பென்னாகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டில் உள்ள ஆழ்துளை கிணறு மற்றும் மினிடேங்கிற்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்து  நூதன முறையில் கவுன்சிலர் அஞ்சலி செலுத்தினார்.

 

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சி மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. இங்கு உள்ள ஒன்பதாவது வார்டில் பத்து வருடங்களுக்கு மேலாக மக்களுக்கு ஆழ்துளை கிணறு மற்றும் மினிடேங்க் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில்  கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்துளை கிணற்றிலிருந்து மினிடேங்குக்கு குடிநீர் ஏற்றும் மோட்டார் திருடு போனது.  இதனை தொடர்ந்து ஒன்பதாவது வார்டு பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும் பேரூராட்சி செயல் அலுவலர் கீதா அதனைக் கண்டு கொள்ளாமல் பலமுறை ஒரு தலை பட்சமாக பேசி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பேரூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற குமார், ஆழ்துளை கிணறு மற்றும் மினிடேங்க்கை சீரமைத்து மக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் விநியோகிக்க  பேரூராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் பலமுறை வலியுறுத்தியுள்ளார். 



 

ஆனால் பேரூராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதனைக் கண்டித்து இன்று பென்னாகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு பகுதியில் உள்ள மினிடேங்கிற்கு, வார்டு கவுன்சிலர் குமார் மற்றும்  பொதுமக்கள்  மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து நூதன முறையில் மௌன அஞ்சலி செலுத்தினர். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடிப்படை வசதிகள் செய்து தரக் கூறி இதுபோன்று பேரூராட்சி அலுவலகம் முன்பு கருப்பு துணியால் கண்ணை கட்டிக்கொண்டு ஒன்பதாவது வார்டு பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுவரை  எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.