சேலத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு தொடர்புடைய நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வருமானத்திற்கு அதிகமாக ரூ.58.23 கோடி கூடுதலாக 3928 சதவீதம் சொத்துக்கள் குவித்ததாக எழுந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் சென்னை, கோவை, சேலம் உள்பட தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 58 இடங்களில் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.



சேலம் மாவட்டத்தில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் நகைக்கடை ஒன்றில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காலை முதலே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் 7 பேர் கொண்ட குழுவினர் சோதனை ஈடுபட்டுள்ளனர். மூன்று தளங்கள் உள்ள இத்தனியார் நகைக்கடையில், காலை 10 மணி அளவில் சோதனையானது தொடங்கப்பட்டது. முதலில் தரைதளத்தில் மூன்று மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது.


அப்போது கடை ஊழியர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இரண்டாம் தளத்திற்கு செல்லும் போது கடை திறக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சோதனை நடைபெறும் பகுதி சேலம் மத்திய பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதி என்பதால் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை தற்போது முடிவடைந்ததாக கூறப்பட்டு வரும் நிலையில் இதுவரை எந்தவித முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 



மேலும், சேலம் மாவட்டம் ஆத்தூர் விநாயகபுரம் ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் வரதராஜ பெருமாள் வீடு, சேலம் மாவட்டம் மேட்டூர் ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் சரவணன் வீடு, ஆத்தூர் பகுதியில் மகாகணபதி நகைக்கடை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. அந்த நகை கடையில் இருந்த நகைகளை சேலத்தில் பிரபல நகைக் கடையான ஏ.வி.ஆர் சொர்ண மஹால் வாங்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆத்தூர் உடையார்பாளையம் ஏ.வி.ஆர் சொர்ணமஹால் நகைக்கடை உள்ளிட்ட பகுதிகளிலும் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது மனைவி, மகன் உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் இரண்டாம் முறையாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.