சேலம் மாநகராட்சியின் மாமன்ற இயல்பு கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு தங்களது வார்டுக்கு உட்பட்ட பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர். அப்போது மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ, சேலம் மாநகர பகுதியில் உள்ள குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்தார். மேலும் பொது மக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு தொடர்ச்சியாக ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அவரைத் தொடர்ந்து மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அதிமுகவை சேர்ந்த யாதவமூர்த்தி பேசுகையில், மாமன்ற உறுப்பினர் என்ற முறையில் அலுவலகம் கட்டுவதற்கு அனுமதி கேட்டிருந்தேன். அதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு அனுமதியும் அளிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் சேலம் திமுக மாவட்ட செயலாளர் முறையீடு இருந்ததால் கட்டுமான பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு உடனடியாக பதிலளிக்க வேண்டுமென சேலம் மாநகராட்சி ஆணையாளரிடம் கேட்டுக் கொண்டார். அதற்கு பதில் அளித்த ஆணையாளர், ஒரு வாரத்திற்குள் உங்கள் பகுதிக்கு வந்து இது குறித்து ஆய்வு செய்வதாக கூறினார். தொடர்ந்து பேசிய யாதவ் மூர்த்தி, சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ராஜேந்திரன் தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் எல்லை மீறி நடப்பதாக புகார் தெரிவித்தார். மேலும் மேயர் கட்சி பாகுபாடு இன்றி செயல்பட்டு வருவதாகவும், ஆனால் உங்களை வழிநடத்துகின்ற சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தவறான முறையில் வழி நடத்துவதாக கூறினார். இதனால் ஆத்திரமடைந்த திமுக கவுன்சிலர்கள் அவரை மேற்கொண்டு பேச விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிமுக கவுன்சிலர்கள் எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்காத திமுகவினரை கண்டிப்பதாக கூறி, மேயரின் மேசை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது திமுக கவுன்சிலர்கள், அதிமுக கவுன்சிலர்களை இழுத்து வெளியேற்ற முயன்றனர். இதனால் கூட்ட அரங்கில் பரபரப்பு நிலவியது. பின்னர் மேயர் தலையிட்டு அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் மாநகராட்சியின் வளர்ச்சி குறித்து மட்டுமே பேச வேண்டும், தனிப்பட்ட நபர்கள் குறித்து மாமன்றத்தில் பேச வேண்டாம் என கூறி அனைவரையும் சமாதானப்படுத்தி கூட்டத்தை நிறைவு செய்து வைத்தார்.
இதற்கிடையே சேலம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சேலம் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய் பிரச்சனை அதிக அளவு உள்ளதாக கூறி தெரு நாய் முகமூடிகள் அணிந்து சேலம் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார். பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சேலம் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் தெரு நாய் தொல்லை அதிகரித்துள்ளது. மாநகராட்சியில் நாய் பிடிக்கும் வாகனங்கள் கண்ணில் பார்ப்பது அரிதாக உள்ளது. இரவு நேரங்களில் தனியாக செல்லும் வாகன ஓட்டிகளை தெரு நாய்கள் துரத்திச் செல்வதும் விபத்து ஏற்படுகிறது. இதேபோன்று தெரு நாய்களால் பலர் கடிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர் என்று அதிகாரிகளிடம் கூறினர். இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அலுவலர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திரும்பிச் சென்றனர். இதனால் சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.