தருமபுரி மாவட்டத்தில் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு முகாம் தருமபுரி இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பாரதியார் நகர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதில் தருமபுரி மாவட்டம் மட்டுமல்லாமல், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகாசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொழுநோயால் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு அரசு இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கி, குடிநீர் உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளது. இந்த மக்கள் அரசு வழங்கும் உதவித் தொகையை வைத்துக் கொண்டும், நியாய விலை கடையில் வழங்கும் பொருட்களை வைத்து தங்களது வாழ்வாதாரத்தை நகர்த்தி வருகின்றனர்.
ஆனால் நியாய விலை கடைக்கு 3 கி.மீ தூரம் செல்ல வேண்டும், கூட்ட நெரிசலில் நோயாளிகள் என பிடித்து தள்ளுவதாவும், போதிய சாலை வசதி இல்லை, தூய்மை பணியாளர்கள் வருவதில்லை வேதனை தெரிவித்தனர். இந்த மக்களின் அவலம் குறித்து நமது ஏபிபி நாடு இணையத்தில் நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். இதனை அறிந்த தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி, தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு முகாமில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் விசாரணை நடத்தி, போதிய வசதிகளை செய்து கொடுக்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார். இதனை தொடர்ந்து இன்று கூட்டுறவு துணைப் பதிவாளர்(பொது வினியோகத் திட்டம்) டி.சி.மணிகண்டன் தலைமையில், கூட்டுறவு சார் பதிவாளர், கௌரி, தனி வட்டாட்சியர் கி.ஆறுமுகம், தனி வருவாய் ஆய்வாளர் சிங்காரவேலன் உள்ளிட்ட வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து முகாமில் உள்ள மக்களிடம் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து மாதந்தோறும் நகரும் நியாய விலை கடையில் மூலம் பாரதியார் நகரில், அரசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். தொடர்ந்து மாலையே வாகனம் மூலம் பொருட்கள் எடுத்து வந்து பாரதியார் நகரில் அரசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கினர். மேலும் பொருள் வாங்க குடும்பத்தில் உள்ளவர்கள் வந்தாலே பொருட்கள் வழங்கப்படும், கை ரேகை வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என வருவாய் துறையினர் தெரிவித்தனர். மேலும் துப்புரவு பணியாளர்கள் வருவதற்கும், சாலை வசதி ஏற்படுத்தி தரவும் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு எடுத்து செல்வதாக உறுதியளித்தனர். தொடர்ந்து தங்களது பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கிடைத்ததால், தொழுநோய் மறுவாழ்வு முகாமை சேர்ந்த மக்கள் சந்தோசமடைந்து ஏபிபி நாடு இணையத்திற்கு நன்றி தெரிவித்தனர்.