சேலம் மாவட்டம் ஆத்தூர் தேவியாக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் - சுதா தம்பதியினர். இவர்களது மகள் தர்ஷிகா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுவயதிலிருந்தே யோகா மீது ஆர்வம்கொண்ட இவர் ஊரடங்கு காலத்தில் பள்ளி விடுமுறையில் வீட்டில் இருந்த மாணவி தர்ஷிகா தொடர்ந்து யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் யோகாவில் சாதிக்கும் எண்ணம் கொண்ட மாணவி தர்ஷிகா திருச்சியை சேர்ந்த பதஞ்சலி கிருஷ்ணகுமார் குருஜி அவர்களின் பயிற்சியில் தலையில் தக்காளிப் பழத்தை வைத்து பத்மாசன யோகாசன பயிற்சியை மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் கொரோனாவின் மூன்றாவது அலை குழந்தைகளைத் தாக்கும் இதிலிருந்து குழந்தைகள் சிறுவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள யோகா அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வந்துள்ளது. மாணவி தர்ஷிகா பத்மாசன யோகாசனம் செய்து உலக சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தலையில் தக்காளி பழத்தைவைத்து பத்மாசனம் யோகாசனத்தை 31 நிமிடம் அசையாமல், ஒரே இடத்தில் அமர்ந்து யோகாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
மாணவியின் இந்த சாதனையை சேலம் மாநகர காவல்துறையில் துணை ஆணையாளர் வேதரத்தினம் பாராட்டினார். பின்னர் மாணவியின் இந்த சாதனையை பதஞ்சலி புக் ஆஃ வேர்ல்டு ரெக்கார்டுஸ் அமைப்பு அங்கீகரித்து உலக சாதனைக்கான கேடயம் மற்றும் சான்றிதழை, திருச்சியை சேர்ந்த பதஞ்சலி குரு கிருஷ்ணகுமார் வழங்கி பாராட்டினார்
இந்த உலக சாதனை குறித்து மாணவி தர்ஷிகா செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, கொரோனா மூன்றாவது அலையில் இருந்து குழந்தைகள் தங்களை பாதுகாத்துக்கொள்ள யோகாசனம் செய்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த உலக சாதனையை படைத்துள்ளேன் என்றும் கூறினார். மேலும் இந்த யோகாசனம் செய்வதால், மூச்சு விடுவதில் சிரமம் இல்லாமல், நன்மை அதிகரிக்கும் என்னும் விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்பினேன் என்றார்
இந்த சாதனை குறித்து யோகாசன பயிற்சியாளர் குரு கிருஷ்ணகுமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, பள்ளி குழந்தைகளிடையே யோகாசன ஆர்வத்தை தூண்டும் விதத்திலும் கொரோனா மூன்றாவது அலையிலிருந்து குழந்தைகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பதஞ்சலி வேர்ல்ட் ரெக்கார்ட் சார்பில் இந்த சாதனை நிகழ்வு நடத்தியதாக கூறினார்.