இந்திய திருநாட்டின் 75 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து மாவட்டத்தில் சிறப்பாகப் பணிபுரிந்துவரும் 166 காவலர்களுக்கு முதலமைச்சரின் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது. மேலும், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 77 அலுவலர்கள் மற்றும் 112 காவல்துறையினருக்கு விருதுகள் மற்றும் நற்சான்றிதழ்கள் இன்றைய தினம் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வழங்கினார். 



மேலும், மாற்றுத்தினாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மகளிர் திட்டம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூ.19.41 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


பின்னர் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் கண் கவர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமையில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில், சேலம் சரக டிஐஜி உமா, சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


முன்னதாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேசத்திற்காக உயிர் துறந்த ராணுவ வீரர்கள் நினைவுச் சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மரியாதை செலுத்தினார். 



இதேபோல் சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தேசியக்கொடியனை ஏற்றி வைத்தார். பின்னர் காவல்துறையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் சேலம் மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகர ஆணையாளர் பாலச்சந்தர், சேலம் மாநகராட்சியின் துணை மேயர் சாரதா தேவி, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். 


குடியரசு தினத்தை முன்னிட்டு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.