தருமபுரி மாவட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன்  அமைச்சர் நேரு ஆய்வு.

 

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் முன்னிலையில் நகராட்சி மற்றும் பேரூராட்சி வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நகர் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் கழிவு நீர் கால்வாய், குடிநீர் பிரச்சணை, சாலை வசதிகள் உள்ளிட்டவை குறித்தும், அதை எவ்வாறு செல்படுத்த வேண்டும் என்பது குறித்தும் அரசு அதிகாரிகளுடன் விவாதிக்கபட்டது. அதனையடுத்து பேசிய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு கூட்டம் நடத்தினார்.

 

அப்பொழுது கூட்டத்தில் பேசிய அமைச்சர் நேரு, தமிழக முதல்வர் நகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளில் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் ரூ.300 கோடியும், பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ரூ.300 கோடியும் என மொத்தம் ரூ.600 கோடி மதிப்பிலான நிதியினை நகராட்சி நிர்வாகத்துக்கு ஒதுக்கீடு செய்து ஆணையிட்டார்கள். அதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர்வசதி, சாலைவசதி, கழிவு நீர் கால்வாய், தெருவிளக்கு  உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு முன்மொழிவுகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

 

தருமபுரி மாவட்டத்தில் புளோரைடு குறைப்பு திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட சுகாதாரமான குடிநீர் வழங்கிட தமிழக முதல்வர் அவர்களின் கனவு திட்டமான ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட சுகாதாரமான குடிநீர் வழங்கிட வேண்டும் என்கிற அடிப்படையில் சென்ற மாதம் தமிழக முதல்வர், ஒகேனக்கல்லிற்கு நேரில் வந்து கள ஆய்வு மேற்கொண்டு சிறப்பாக அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் வழங்கிட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

 

இந்த ஆய்வு கூட்டத்தில் முன் வைக்கப்படும் அனைத்து கோரிக்கைகளும் தமிழக முதல்வர்  கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கான திட்டப்பணிகள் மற்றும் மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, சாலை வசதி, கழிவு நீர் கால்வாய், தெருவிளக்கு  உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தும் பணிகளை செயல்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நேரு தெரிவித்தார். இந்த கூட்டத்தில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.செந்தில்குமார், கூடுதல் ஆட்சியர் மரு.இரா.வைத்திநாதன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.