பாப்பிரெட்டிப்பட்டி அருகே தனியா பார்சல் சர்வீஸ் லாரியும் தனியார் சுற்றுலா பேருந்தும் மோதிய விபத்தில் 11 பேர் காயமடைந்தனர்.

 





வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள அருகம்பேடு ஜோதிநகர் இரு கிராமங்களில் இருந்து 55 பேர் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏத்தாப்பூரில் உள்ள ஸ்ரீ முத்துமாலை முருகன் திருக்கோவிலுக்கு இரவு 11 மணி அளவில் வழிபாடு செய்வதற்காக சென்றுள்ளனர். அப்பொழுது தருமபுரி மாவட்டம் அரூர் வழியாக விடியற்காலை சேலம் நோக்கி செல்லும்போது நான்கு வழி சாலையில், பாப்பிரெட்டிபட்டி அடுத்த எருமியாம்பட்டி அருகே ஈரோட்டில் இருந்து அரூர் நோக்கி வந்த தனியார் பார்சல் சர்வீஸ் லாரியும் மோதிக் கொண்டது. இந்த விபத்தில்  11 பேர் காயம் அடைந்தனர். தொடர்ந்து காயம் அடைந்தவர்களை மீட்டு அவசர ஊர்தி மூலமாக அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் தர்மலிங்கம், விஜயா, மாலா ஆகிய மூன்று பேர் மட்டும் படுகாயமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து கோபிநாதம்பட்டி கூட்ரோடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதனை அறிந்த திமுக மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் விபத்தில் காயம் அடைந்தவர்களை, அரூர் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மேலும் சிகிச்சையில் இருந்து வருபவர்களுக்கு பன், பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கி ஆறுதல் தெரிவித்தார். அப்பொழுது காயமடைந்தவர்களை தவிர மற்றவர்கள் ஊருக்கு செல்ல முடியாமல், மருத்துவமனை அருகில் காத்திருந்தனர். அப்பொழுது சுற்றுலா வந்தவர்களையும் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் சந்தித்து விபத்து நடந்தது குறித்து கேட்டு அறிந்தார். அப்பொழுது தங்கள் ஊருக்கு செல்ல முடியாமல், செல்வதற்கு வாகன வசதி இல்லாமல் இங்கேயே அமர்ந்திருக்கின்றோம் என சுற்றுலா வந்தவர்கள் தெரிவித்தனர். இதனை எடுத்து திமுக நிர்வாகி ஒருவரை அழைத்து இவர்கள் செல்வதற்கான வாகனத்தை அனுப்பி வைத்தார். மேலும் இவர்களது சொந்த ஊரில் இறக்கி விட்டு திரும்பி வருமாறும், அதற்கு உண்டான வாடகையை தான் கொடுப்பதாகவும் அவரிடம் தெரிவித்தார். இதனை அடுத்து விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு நன்றி தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சுற்றுலா வேன் மூலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் வெளியில் இருந்தவர்கள் என இருபது பேர் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர்.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண