தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், அ.தி.மு.க, தி.மு.க. ஆகிய பிரதான கட்சிகளுடன் நாம் தமிழர், அ.ம.மு.க., மக்கள் நீதிமய்யம் ஆகிய கட்சிகளும் முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாக களமிறங்குகிறது.
இந்த நிலையில், கடந்தாண்டு விருப்ப ஓய்வு பெற்ற சகாயம் ஐ.ஏ.எஸ். கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்டசபை தேர்தலில் தனது அமைப்பு போட்டியிடும் என்று அறிவித்திருந்தார். இந்த சூழலில், சென்னை, கோயம்பேட்டில் இன்று சகாயம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
20 தொகுதிகளில் போட்டி
அப்போது, அவர் கூறியதாவது, புதிய கட்சி தொடங்கி அதை பதிவு செய்வதற்கு போதியளவு அவகாசம் தற்போது இல்லை. இதன் காரணமாக, என்னுடைய சகாயம் அரசியல் பேரவை அமைப்பினர் தற்போது 20 தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவார்கள். இதுதவிர, தமிழ்நாடு இளைஞர் கட்சி 15 தொகுதிகளிலும், வளமான தமிழக கட்சி 1 தொகுதியிலும் சகாயம் அரசியல் பேரவை அமைப்பினருடன் இணைந்து போட்டியிட உள்ளனர் என்றார். மேலும், இந்த தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்றும் சகாயம் கூறினார்.
சகாயம் பேரவை அமைப்பினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் போட்டியிடவில்லை. ஆனால், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் அவரது அமைப்பு சார்பாக சுரேஷ் மாணிக்கம் என்பவர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.