சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ”தமிழகத்தில் பா.ஜ.க.வால் வேரூன்ற முடியாததால், அதிமுகவை அச்சுறுத்தி, மிரட்டி அவர்கள் நிழலில் காலூன்ற முயற்சிக்கின்றனர். மதவாத கும்பல்களிடம் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் இந்தியாவை காப்பாற்ற, தமிழகத்தில் அமைந்துள்ளதுபோல ஒரு மதச்சார்பற்ற கூட்டணியை, இப்போதே ராகுல்காந்தி மற்ற மாநிலங்களில் அமைக்க முயற்சிக்கவேண்டும்” என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
மேலும், ”கருணாநிதியின் உடலை அண்ணாவின் நினைவிடம் அருகே அடக்கம்செய்ய ஆறடி நிலம் கொடுக்காதவர்கள், இனியும் தமிழக ஆட்சியில் இருக்கலாமா? கருணாநிதி மறைந்தபோது மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் என்ன உதவிவேண்டும் என்று கேட்டபோது, முதல்வரிடம் சொல்லி அண்ணா நினைவிடம் அருகே இடம் ஒதுக்க சொல்லுங்கள் என்று சொல்லியும் அவர்கள் எதையும் செய்து தரவில்லை” என்று பேசினார்.
”தமிழக முதல்வர் முகக்கவசம் அணிந்துள்ளார், முகக்கவசம் அணிவதால், அதற்குப் பின்னால் உள்ள முகம் யார் என்ன நினைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளமுடியாது; முதல்வரின் முகக்கவசத்தை அகற்றினால் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் தோற்றம் அங்கிருக்கும்” என்று இதே கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது