காரைக்கால்: 2026-ஆம் ஆண்டு புத்தாண்டை பொதுமக்கள் பாதுகாப்பாகவும், போக்குவரத்து நெரிசலின்றியும் கொண்டாடும் வகையில், காரைக்கால் மாவட்ட காவல்துறை விரிவான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை திட்டத்தை அறிவித்துள்ளது. காரைக்கால் மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் (SSP) எம்.வி.என்.வி. லட்சுமி சௌஜன்யா, இது குறித்த விரிவான பாதுகாப்பு விதிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது;
300 காவலர்களுடன் தீவிர கண்காணிப்பு
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கவும், போக்குவரத்தை சீர்செய்யவும் சுமார் 300 காவல் பணியாளர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். இதில் காரைக்கால் மாவட்ட காவல்துறையினருடன் இணைந்து இந்திய இருப்புப் படை (IRBn) மற்றும் ஊர்க்காவல் படையினரும் (Home Guards) பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
நான்கு அடுக்கு பாதுகாப்பு திட்டம்
பொதுமக்கள் நடமாட்டத்தை முறைப்படுத்த நான்கு நிலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
அடுக்கு 1 (எல்லைகள்): காரைக்கால் மாவட்டத்தின் அனைத்து எல்லை சோதனைச் சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்கள் முறைப்படுத்தப்படும்.
அடுக்கு 2 (வெளிப்புற சுற்றுவட்டங்கள்): கோட்டுச்சேரி, நெடுங்காடு, திருநள்ளாறு, நிரவி மற்றும் திருப்பட்டினம் ஆகிய முக்கிய சந்திப்புகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.
அடுக்கு 3 (கடற்கரை சாலை): காரைக்கால் நகரத்திலிருந்து கடற்கரைக்கு செல்லும் வாகனங்கள் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் அனுமதிக்கப்படும்.
அடுக்கு 4 (பாதசாரி மண்டலம்): காரைக்கால் கடற்கரை பகுதி முழுவதும் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு, முழுமையாக பாதசாரிகள் மட்டுமே நடமாடும் மண்டலமாக மாற்றப்படும்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு
கொண்டாட்டங்களுக்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக கடற்கரை பகுதியில் "May I Help You" என்ற உதவி மையங்கள் அமைக்கப்படும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ERSS காவல் ரோந்து குழுக்கள் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். மேலும், கூட்ட நெரிசலில் குழந்தைகள் மற்றும் முதியவர்களைப் பாதுகாக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தொழில்நுட்ப உதவியுடன் கண்காணிப்பு
மாவட்டம் முழுவதும் முக்கிய சாலைகள், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகள் மற்றும் இருண்ட இடங்களில் சிசிடிவி (CCTV) கேமராக்கள் மூலம் நேரடி கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். இதுதவிர, சட்டம் ஒழுங்கை பராமரிக்க 10 முதல் 15 சிறப்பு பிக்கெட்டுகள் (Picketing) அமைக்கப்பட்டு, சமூக விரோத செயல்கள் தடுக்கப்படும்.
போக்குவரத்து விதிமீறல்களுக்கு "பூஜ்ய சகிப்புத்தன்மை"
போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிக்க உடல் கேமராக்கள் (Body-Worn Cameras) மற்றும் அல்கோமீட்டர்களுடன் 7 சிறப்பு சோதனைக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
*மதுபோதையில் வாகனம் ஓட்டுதல்: குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
*பைக் ஸ்டண்ட்: அதிவேகமாகச் செல்பவர்களைக் கண்டறிய 'ஸ்பீடு கன்' (Speed Gun) பொருத்தப்பட்ட இன்டர்செப்டர் வாகனங்கள் பயன்படுத்தப்படும். பைக் ஸ்டண்ட்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்.
* இதர மீறல்கள்: மூன்று பேர் பயணம் செய்தல், மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்கள் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் ஆகியவை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
*வாகன நிறுத்தம்: அனுமதிக்கப்படாத இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் கிரேன்கள் மூலம் உடனடியாக அகற்றப்படும்.
கடலோர பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகள்
கடற்கரை மற்றும் அரசலாறு ஆற்றுப் பகுதிகளில் 5 டன் இன்டர்செப்டர் படகு மூலம் கடலோர காவல்துறையினர் ரோந்து செல்வார்கள். புத்தாண்டு முன்னிரவில் பொதுமக்கள் கடலில் இறங்குவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் கடற்கரையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர உதவிக்காக உயிர்காக்கும் காவலர்கள் (Lifeguards) பணியில் இருப்பார்கள்.
முக்கிய அறிவிப்புகள் மற்றும் கட்டுப்பாடுகள்
* நேரக் கட்டுப்பாடு: சிறப்பு அனுமதி பெற்ற இடங்களைத் தவிர, மற்ற அனைத்து உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் தெருவோரக் கடைகள் நள்ளிரவு 12:00 மணிக்குள் கட்டாயம் மூடப்பட வேண்டும்.
* பொது இடங்கள்: திறந்த வெளியில் மது அருந்துதல் அல்லது பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் புதுச்சேரி காவல் சட்டத்தின் (PP Act) கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
*வசதிகள்: பொதுமக்களுக்காகக் குடிநீர், நடமாடும் கழிப்பறைகள் மற்றும் முதலுதவி மையங்கள் முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அனைவரும் காவல்துறையின்
அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, பாதுகாப்பான முறையில் புத்தாண்டை வரவேற்க வேண்டும் என்று மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.