அண்ணாமலையும் தமிழக அரசியலும்

தமிழகத்தில் பாஜகவை வளர்க்கும் வகையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலையை, மாநில தலைவராக நியமித்தது தேசிய தலைமை, அண்ணாமலையின் அதிரடி அரசியலால் அனைவராலும் திரும்பிபார்க்கப்பட்டார். பல கிராமங்களிலும் பாஜக வேகமாக வளர்ந்தது. ஆனால் கூட்டணி கட்சியான அதிமுகவுடன் மோதல் போக்கையே அண்ணாமலை கையாண்டார். கடந்த 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது பாஜக- அதிமுக கூட்டணி உடைய அண்ணாமலையே முக்கிய காரணமாக கூறப்பட்டது. இதனையடுத்து பாஜக தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கிய அண்ணாமலை, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரனை பாஜக கூட்டணியில் இணைத்தார். ஆனால் தேர்தலில் தோல்வி தான் பாஜகவிற்கு கிடைத்தது.

Continues below advertisement

தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அண்ணாமலை

எனவே 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக தேசிய தலைமை திட்டமிட்டது. இதற்கு இடையூறாக இருந்த அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தங்களுக்கு கூட்டணியில் உரிய மரியாதை தரவில்லையெனக்கூறி பாஜக தலைவராக உள்ள நயினார் நாகேந்திரன் மீது குற்றம்சாட்டி கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் அடுத்தடுத்து விலகினர். இதனால் பாஜக தலைமை அதிர்ச்சி அடைந்தது. ஆனால் முன்னாள் தலைவரான அண்ணாமலை மட்டும் ஓபிஎஸ் மற்றும் டிடிவியுடன் நட்புடன் பழகி வருகிறார். டிடிவி தினகரனுக்கு கடந்த வாரம் தனது வீட்டில் அண்ணாமலை விருந்து வைத்தார். 

ஜெ. வலது கரம் டிடிவி- அண்ணாமலை வாழ்த்து

இந்த நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாளையொட்டி,  பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர், அன்பு அண்ணன் டிடிவி தினகரனுக்கு இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சுமார் நாற்பதாண்டுகளாக, தமிழக அரசியலில் முக்கியமான இடம் பெற்றவர். மக்கள் பணிகளில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர்.அரசியல் வியூகங்களில் சிறந்தவராகத் திகழ்பவர். மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களின் அவரது வலதுகரமாகத் திகழ்ந்தவர். அண்ணன் டிடிவி தினகரன் அவர்கள் நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தொடர்ந்து தனது அரசியல் பணிகளிலும், சமூகப் பணிகளிலும் சிறந்து விளங்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

யார் இந்த டிடிவி தினகரன்

இந்த பதிவு அதிமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாகவும் உதவியாளராகவும் இருந்த வி.கே. சசிகலாவின் அத்தை மகன் தான் டிடிவி தினகரன், ஒரு காலத்தில் ஜெயலலிதா, டிடிவி தினகரனுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார். கட்சியில் முக்கிய பொறுப்புகள் கொடுத்ததோடு,  1999-ஆம் ஆண்டு  பெரியகுளம் தொகுதியில் எம்.பியாகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து சில ஆண்டுகள் அதிமுகவில் தொடர்பு இல்லாமல் இருந்த அவரை 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா,  சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள்  நடராஜன், தினகரன் உள்ளிட்ட 13 பேர் தனக்கு எதிராக செயல்படுவதாகக் கருதி, அனைவரையும் அதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கினார். இது மட்டுமில்லாமல் போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து வெளியேற்றினார். 

டிடிவி தினகரன் அரசியல் பயணம்

சில மாதங்களுக்கு பிறகு சசிகலா மன்னிப்புக் கடிதம் கொடுத்ததையடுத்து  2012-ல் மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்தார், ஆனால் தினகரன் உள்ளிட்ட மற்றவர்கள் மீண்டும் கட்சியில் சேர்க்கவில்லை. ஜெயலலிதா மறைந்த பிறகு தான் மீண்டும் அதிமுகவிற்குள் நுழைந்தார் டிடிவி தினகரன்,சசிகலா கட்சியின் பொதுச்செயலாளராகவும், தினகரனை துணைப் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். அடுத்தாக முதலமைச்சராக பொறுப்பேற்ற இபிஎஸ், கட்சியை கைப்பற்றிய பிறகு டிடிவி தினகரனை கட்சியில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தான் அமமுகவை டிடிவி தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.