TVK - Congress Alliance : ‘கேரளா பயணத்தை ரத்து செய்த முதல்வர் விஜய்’ காங்கிரஸ் கட்சியுடன் மனக்கசப்பு..?
'திமுக ஆட்சியில் இருந்ததுமாதிரி த.வெ.க. ஆட்சியில் அமைதியாக இருக்க வேண்டாம், நமக்கான கொள்கைகளையும், அடையாளங்களையும் விட்டுக்கொடுக்க வேண்டாம் என எம்.எல்.ஏக்களிடம் ராகுல்காந்தி பேசியிருக்கிறார்’

இன்று கேரள முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சதீஷன் பதவியேற்கவுள்ள நிலையில், அந்த விழாவில் பங்கேற்க தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் அங்கு செல்வதற்கு தயாரான நிலையில், திடீரென அவரது கேரள பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்க்கே என்று முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் விழாவிற்கு முதல்வர் விஜய் செல்லாதது பல்வேறு கேள்விகளை அரசியல் வட்டாரத்தில் எழுப்பியிருக்கின்றது.
விஜய் மீது ராகுல் கோபம் ?
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க எம்.எல்.ஏக்களின் ஆதரவை நாடி இருந்தபோது, முதன் முதலாக தேடிச் சென்று ஆதரவு கரம் நீட்டியது காங்கிரஸ் கட்சி. அதன்பிறகுதான் ஆட்சி அமைத்துவிடுவோம் என்ற நம்பிக்கையே த.வெ.கவிற்கு கிடைத்தது. அதுவும் பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் தொடர்ந்த நிலையில், அந்த கூட்டணியை உடைத்துவிட்டு த.வெ.க-விற்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது. அதன்பின்னர், முதலமைச்சராக விஜய் பதவியேற்கும் விழாவிற்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு வந்தார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி.
சென்னை வந்த அவர், தனியார் ஹோட்டலில் தங்கி, விழாவிற்கு கிளம்ப ஆயத்தமானபோதுதான் தெரிந்தது. ராகுல் காந்திக்கு விழா மேடையில் சீட் போடவில்லை என்பது. விஜய்க்கு ஆதரவாக டெல்லியில் இருந்து கிளம்பிவந்திருக்கும் தனக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என தொடக்கத்திலேயே கோபப்பட்டிருக்கிறார் ராகுல். உடனடியாக, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள் த.வெ.க நிர்வாகிகளுக்கு அழைத்து கடுமையான குரலில் சொன்னபின்னரே, விழா மேடையில் விஜய்க்கு அருகில் ராகுல்காந்திக்கு சீட் கொடுக்கப்பட்டது. அதோடு, இந்தியாவின் முக்கியத் தலைவரான ராகுலிடம், அமைச்சராக பதவியேற்ற சீனியரான செங்கோட்டையன் உட்பட யாருமே அவரிடம் குறைந்தப்பட்சம் கைக்கொடுத்துக் கூட வாழ்த்து பெறவில்லை. இது ராகுலை மட்டுமின்றி, காங்கிரஸ் நிர்வாகிகளுக்கே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
கிரிஷ் ஜோடங்கருக்கு உட்கார இடம் இல்லை
அதுமட்டுமின்றி, வி.ஐ.பி வரிசையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கென முறையாக இடம் ஒதுக்கப்படவில்லை. விழாவிற்கு வந்த காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை, பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோர், உடனடியாக கிடைத்த இருக்கையில் சென்று விழா மேடைக்குக் கீழே அமர்ந்துகொண்டனர். ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள் கிரிஷ் ஜோடங்கர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு அமரக் கூட சீட் கிடைக்கவில்லை. அவர்களை கண்டறிந்து, இருக்கையை ஒதுக்கீடு செய்து அமர வைக்கக் கூட த.வெ.க தரப்பில் யாரும் முன்வரவில்லை. இதுவும் காங்கிரஸ் கட்சியியினரின் கோபத்திற்கு காரணமாக இருக்கிறது.
கிரிஷ் ஜோடங்கருக்கு டோஸ் விட்ட ராகுல்?
விழா முடிந்ததும் கட்சி அலுவலகத்திற்கு சென்றுமுடித்துவிட்டு, தனியார் ஹோட்டலுக்கு சென்ற ராகுல்காந்தி, மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கரிடம் கடுமையாக பேசியிருக்கிறார். தனக்கான சரியான ஏற்பாடுகளை த.வெ.க நிர்வாகிகளுடன் பேசி ஏற்பாடு செய்யக் கூட தெரியாது என்று அவர் கோபித்துக்கொண்டதாகவும், அதே நேரத்தில் பல ஆண்டுகளுக்கு பின்னர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கு சென்ற ராகுல்காந்திக்கு உரிய ஏற்பாடுகளை முறையாக செய்யாததும் அவரை கோபத்தின் உச்சிக்கு கொண்டுச் சென்றிருக்கிறது.
அமைதியா இருக்காதீங்க – எம்.எல்.ஏக்களுக்கு ராகுல் அட்வைஸ்
அதன்பின்னர் டெல்லி கிளம்பிச் சென்ற ராகுல்காந்தியை, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அங்கு சென்று சந்தித்துள்ளனர். அப்போது. திமுக ஆட்சியில் இருந்ததுபோல த.வெ.க. ஆட்சியில் அமைதியாக இருக்க வேண்டாம் என்றும் நம்முடைய தனிப்பட்ட கொள்கைகளிலும் அடையாளங்களிலும் இனி சமரசம் செய்துகொள்ள கூடாது எனவும் திட்டவட்டமாக ராகுல் தெரிவித்திருக்கிறார்.
இழுபறியில் அமைச்சர் பதவி
அதே நேரத்தில், த.வெ.க ஆட்சிக்கு, அதிமுக எம்.எல்.ஏக்கள் 25 பேர் ஆதரவு தெரிவித்துள்ளதும், அதிமுக தலைவர்களை முதல்வர் விஜய் நேரில் சென்று சந்தித்ததும் ராகுல்காந்திக்கு பிடிக்கவில்லை. அதோடு, முதன்முதலாக த.வெ.க.விற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது தொடர்பாகவும் இதுவரையில் முதல்வர் விஜய் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதும் ராகுல்காந்தியை அப்செட் ஆக்கியுள்ளது.
முடிவெடுத்த விஜய்
எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏக்கள் 25 பேர் ஆதரவு கொடுத்துள்ள நிலையில், த.வெ.க ஆட்சிக்கு பிரச்னை இல்லாத சூழல் உருவாகியுள்ளது. அதனால், வெறும் 5 எம்.எல்.ஏக்களை மட்டுமே வைத்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சர் பதவி கொடுப்பது குறித்தும், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு என்ன செய்வது என்பது பற்றியும் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கான துறைகளை ஒதுக்கீடு செய்த பின்னர் முடிவெடுத்துக்கொள்ளலாம் என்றும் த.வெ.க நிர்வாகிகள் முதல்வர் விஜயிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், இப்போது கேரளா சென்றால், அங்கு ராகுல்காந்தி உள்ளிட்டவர்களை சந்தித்து பேசும்போது, அதிமுக ஆதரவு தொடர்பான விஷயங்களும், அமைச்சரவை குறித்தும் பேச வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதாலேயே முதல்வர் விஜய், தன்னுடைய கேரள பயணத்தை ரத்து செய்துவிட்டதாகவும் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், டெல்லி சென்று குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரை முதலில் சந்திப்பதே அரசியல் மரபாக இருக்கும் நிலையில், அதற்காகவும் இந்த பயணம் ரத்து செய்யப்பட்டதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
தொடக்கத்திலேயே பிசுபிசுக்கும் காங்கிரஸ் - த.வெ.க கூட்டணி
அண்டை மாநிலமான கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருக்கும் நிலையில், காங்கிரஸ் ஆதரவுடன் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய், பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்றிருக்க வேண்டும் என்றும், விஜயின் பதவியேற்பு விழாவிற்கு டெல்லியில் இருந்து ராகுல் கிளம்பிவந்த நிலையில், முதல்வர் விஜய் கேரளா செல்லாதது தவறான முடிவு என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஆட்சி அமைப்பதற்கு மட்டும் ஆதரவில்லாமல், வரக்கூடிய உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தலிலும் த.வெ.க-வுடன் கூட்டணி என்று காங்கிரஸ் அறிவித்த நிலையில், தொடக்கத்திலேயே இதுபோன்ற மனக்கசப்பு எழுந்திருப்பது கூட்டணியில் பிசுபிசுப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விவகாரங்களையெல்லாம் கையாண்டு, எப்படி கூட்டணியை விஜய் தக்க வைக்கப்போகிறார் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்






















