முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான நேற்று யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட பங்களாவிற்கு சென்று, அவரது உருவப்படத்திற்கு மலர் தூவினார். அதுமிட்டுமின்றி ஜெயலலிதா நாமம் வாழ்க என்றும் அவர் தெரிவித்தது அரசியல் களத்தில் புதிய அனலை கிளப்பியிருக்கிறது.

Continues below advertisement


வராது வந்த மாமணியாய் வந்த ரஜினி!


டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா மறைந்த பின்னர் இதுவரை அவருக்கு 7 பிறந்தநாட்கள் வந்து சென்றுவிட்டன. ஆனால், அவரது 77வது பிறந்தநாளில், வராது வந்த மாமணியாய் ஏன் ரஜினிகாந்த் அவரது இல்லத்திற்கு செல்ல வேண்டும் என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்திருக்கிறது. அதுவும், பெரிய தலைவர்கள் யாரும் அழைக்காமல், அரசியலில் ஒன்றிற்கும் ஆகாதவராக ஆகிவிட்ட தீபாவும் மாதவனும் அழைத்ததும் ரஜினிகாந்த் ஜெயலலிதா இல்லத்திற்கு செல்ல உடனே சம்மதம் தெரிவித்தது எதற்காக என்றும் சந்தேகம் எழுந்திருக்கிறது.


ஓபிஎஸ் மகனுடனும் ஆதரவாளருடனும் சந்திப்பு


அதே நேரத்தில் ஜெயலலிதா இல்லத்தில் ரஜினிகாந்தோடு ஒன்றாக அமர்ந்திருந்த புகழேந்தி எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து ஓபிஎஸ் ஆதரவாளராக உலகம் அறிந்தவர், அவர் மட்டுமின்றி ஒ.பன்னீர்செல்வத்தின் மகனும் முன்னாள் தேனி எம்.பியுமான ரவீந்திரநாத்தும் அதே நேரத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு வந்தது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்திருக்கிறது.


ஏற்கனவே, ஓபிஎஸ் மகனாக ரவீந்திரநாத், ரஜினிகாந்த் குடும்பத்திற்கு மிக நெருக்கமானவராக அறியப்படும் நிலையில், ஜெயலலிதா இல்லத்திற்கு இருவரும் ஒருவர் பின் ஒருவர் சென்றது, ரஜினிகாந்த் அதிமுகவிற்கு ஏதோ செய்தியை சொல்ல வருகிறார் என்பதை தான் மறைமுகமாக தெரியப்படுத்தும்விதம்தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.


அதிமுக ஒன்றிணைய வேண்டும் என நினைக்கிறாரா ரஜினி?


பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவும் பிரதமர் மோடியும் சொல்வதை எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை என்று தொடர்ந்து ஓபிஎஸ் சொல்லிவரும் நிலையில், மோடியின் நண்பராக அறியப்படும் ரஜினிகாந்த், திடீரென ஜெயலலிதா மீது அதீத பாசம் கொண்டு, அவரது பிறந்தநாளில் அவரை நினைவுக்கூற போயஸ்கார்டன் இல்லத்திற்கே சென்றுள்ளது பாஜகவின் திட்டமாக இருக்குமோ என்ற சந்தேகம் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு எழுந்திருக்கிறது.


திமுகவிற்கு எதிராக பாஜக சதியா ?


இதுமட்டுமின்றி, மீண்டும் 2026ல் திமுக தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கக் கூடாது என்பதற்காக பாஜக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் செல்லும் என்பது ஊரறிந்த கதையாக இருந்து வரும் நிலையில், ஒன்றுப்பட்ட அதிமுகவை உருவாக்க ரஜினியை பகடைக்காயாக பாஜக பயன்படுத்தி, அவரை திமுகவிற்கு எதிராக திசைத் திருப்புகிறதா என்ற கேள்வியும் அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.


திமுக 2021 ஆட்சியை பிடிப்பதை தடுப்பதற்காகவே ‘ஆன்மீக அரசியல்’ என்ற கருத்தை தெரிவித்து ரஜினியை அரசியலுக்கு வர வைக்க பாஜக பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்தப்போதும், புலி வருகிறது கதையாய், அவர் கடைசியில் பாஜகவிற்கே விபூதி அடித்துவிட்டு, அரசியல் வருகைக்கு முழுக்கு போட்டார். ஆனால், வேதாளம் மாதிரி விடாத பாஜக, மீண்டும் இந்த முறை அவரை பயன்படுத்தி திமுகவை வீழ்த்தும் திட்டத்தை கையெலெடுத்திருப்பதாக கணிக்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள்.


2026 வாய்ஸ் கொடுப்பாரா ரஜினி


அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசையில் இருந்த ரஜினி வர முடியாமல் போன நிலையில், ஜெயலலிதாவிற்கு எதிராக 1996ல் வாய்ஸ் கொடுத்த ரஜினிகாந்த் 2026ல் ஒன்றுப்பட்ட அதிமுகவை அமைக்க வாய்ஸ் கொடுப்பாரா? அப்படி அவர் குரல் கொடுத்தாலும் அவர் குரலுக்கான வலிமை இன்னமும் இருக்கிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வி.