New Vice President Candidates: புதிய குடியரசு துணை தலைவராக யாரை தீர்மானிக்க வேண்டும் என்பதில், பாஜக தீவிரமாக உள்ளதாம்.
புதிய குடியரசு துணை தலைவர் யார்?
குடியரசு துணை தலைவராக இருந்து வந்த ஜெகதீப் தன்கர், யாரும் எதிர்பாராத விதமாக தனது பதவியை கடந்த திங்கட்கிழமை அன்று ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய குடியரசு துணை தலைவர் யார்? என்ற கேள்வி நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. பாஜக கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஒருவர் கூட, நாட்டின் மிக உயர்ந்த இரண்டாவது பதவிக்கு தேர்வாகலாம் என தகவல்கள் வெளியாகின. ஆனால், அப்படி நடக்க வாய்ப்பில்லை என்பதே பாஜக தரப்பில் இருந்து தற்போது வெளியாகும் கருத்துகளாக உள்ளன.
வேட்பாளருக்கான தகுதி - பாஜக முடிவு:
பாஜகவை சேர்ந்த முத்த தலைவர் ஒருவரையே புதிய குடியரசு துணை தலைராக கொண்டு வர பாஜக முடிவு செய்துள்ளதாகவும், அதுவும் கட்சியின் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றுபவராக இருப்பவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்நாத் தாக்கூர், பாஜக தேசிய தலைவர் நட்டாவைச் சந்தித்தது பல சந்தேகங்களை எழுப்பியது. ஆனால், இது ஒரு வழக்கமான சந்திப்பு மட்டுமே என்றும், ராம்நாத் தாக்கூரை வேட்பாளராக களமிறக்கும் திட்டம் இல்லை என்றும் பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் யார்?
இதுவரை 16 முறை நடைபெற்றுள்ள குடியரசு துணை தலைவர் பதவிக்கான தேர்தலில், 4 முறை மட்டுமே வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக, இந்த முறையும் எதிர்க்கட்சிகளால் ஒரு வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, கட்சியின் மூத்த தலைவர் ஒருவரை வேட்பாளராக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த, தற்போதைய மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஸ் நாராயணின் சிங்கின் பெயர் அடிபட்டாலும், வாய்ப்பு மிக குறைவு என்றே கூறப்படுகிறது. முன்னதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பெயரும் அடிபட, அதனை பாஜக திட்டவட்டமாக மறுத்துள்ளது.
தேர்தல் பணிகள் தீவிரம்:
இதனிடையே, நடைமுறைகள் அனைத்தும் முடிந்த பிறகு, புதிய குடியரசு துணை தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னதாக தேர்தல் பணிக்கான அதிகாரிகளை நியமிப்பது உள்ளிட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள் ஆகியோர் வாக்களித்து, புதிய குடியரசு துணை தலைவரை தேர்வு செய்ய உள்ளனர்.
ஜெகதீப் தன்கரால் கடுப்பான பாஜக?
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட பிறகு, அவையில் ஜெகதீப் தன்கர் எதிர்க்கட்சிக்கு அதிக வாய்ப்பளித்ததாக பாஜகவினர் இடையே அதிருப்தி எழுந்துள்ளது. சர்ச்சையில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என அரசு தரப்பே தீர்மானம் கொண்டு வரவிருந்த நிலையில், எதிர்க்கட்சியின் தீர்மானத்தை ஜெகதீப் தன்கர் ஏற்றுக்கொண்டது பாஜகவை மேலும் கோபப்படுத்தியுள்ளது. முன்னதாக விவசாயிகள் பிரச்னைகள் குறித்த அவரது நிலைப்பாடும், பொதுவெளியில் மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானிடம் தன்கர் எழுப்பிய கேள்விகளும் அரசை அதிருப்தி அடைய செய்துள்ளது. இதன் ஒட்டுமொத்த விளைவாகவே, ராஜினாமா செய்யாவிட்டால் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் பாஜக முடிவெடுத்ததாக தெரிகிறது. இதன் காரணமாகவே, 2027ம் ஆண்டு நடைபெற வேண்டிய புதிய குடியரசு துணை தலைவருக்கான தேர்தல் அடுத்த சில வாரங்களில் நடைபெற உள்ளது.