Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
'சேரன்மகாதேவியில் விதிகளை மீறி இயங்கிய, அரசியல் பின்புலம் கொண்ட இசக்கியப்பன் என்பவரது குவாரிக்கு 20 கோடி அபராதம் விதித்தவர் சிவகிருஷ்ணமூர்த்தி. இதனால், அங்கிருந்து அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்’

உச்சநீதிமன்றத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே மேகமலை விவகாரம் மிகப்பெரிய பிரச்னையாக புகைந்துகொண்டிருக்கும் நிலையில், தேனி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டிருக்கிறார் இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சிவகிருஷ்ணமூர்த்தி.
கொதிநிலையில் இருக்கும் மேகமலை மக்கள் பிரச்னை
மேகமலையில் காலங்காலமாக வாழ்ந்து வரும் மக்களை அங்கிருந்து அப்புறடுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஒரு படி மேலே சென்று தேவையென்றால் துணை ராணுவப்படையை கூட அழைத்துக்கொள்ளுங்கள் என்றும் சொல்லியிருந்தது. இது மேமகலையில் வசிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய சட்டத்துறை அமைச்சரும் தேனி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சிடிஆர் நிர்மல்குமார், மேகமலை மக்கள் அவர்கள் வாழும் இடத்திலேயே தொடர்ந்து வசிப்பதற்கும், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்கவும் தவெக அரசு தயாராக இருக்கிறது என்றும் உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்து, அந்த மக்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற்றுத் தரும் எனவும் அறிவித்திருந்தார்.
தேனியின் புதிய ஆட்சியரான சிவகிருஷ்ணமூர்த்தி
இதனையடுத்து, இப்படி சிக்கலான சென்சிட்டிவான மேகமலை பிரச்னையை கையாளவும், வழக்கு தொடர்பாக மக்களுக்கு சாதகமான வகையில் ஆவணங்களையும் ஆதாரங்களையும் தயாரிக்கவும், தேனி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக துடிப்பான ஐ.ஏ.எஸ் அதிகாரியான சிவகிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டிருப்பது கவனத்திற்குரிய விஷமாக மாறியிருக்கிறது. ஏற்கனவே மாஞ்சோலை எஸ்டேட் பிரச்னை தொடர்பாக சிறப்பு அதிகாரியாக பணியாற்றி பாராட்டு பெற்றவர் சிவகிருஷ்ணமூர்த்தி என்பதால் இவருடைய நியமனம் தனிக் கவனம் பெற்றிருக்கிறது.
கூலித் தொழிலாளியின் மகன் இன்று மாவட்ட கலெக்டர்
2018 பேட்ஜ் தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சிவகிருஷ்ணமூர்த்தி, சென்னை துறைமுகத்தில் ஒரு சாதாரண கூலித் தொழிலாளியாக பணியாற்றவரின் மகன். நெல்லையில் சார் ஆட்சியராகவும் சேரன்மகாதேவியில் பணிபுரிந்தபோதும் எந்த அரசியல் அதிகாரத்திற்கும் பணியாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மக்களின் அதிகாரியாக செயல்பட்ட பெருமைக்குரியவர்.
20 கோடி ரூபாய் அபராதம் விதித்ததால் பணியிடமாற்றம்
குறிப்பாக, சேரன்மகாதேவி பகுதியில் விதிகளை மீறி இயங்கிய, அரசியல் பின்புலம் கொண்ட இசக்கியப்பன் என்பவரது குவாரிக்கு 20 கோடி ரூபாய் அபராதம் விதித்தவர் சிவகிருஷ்ணமூர்த்தி. இதனால், அங்கிருந்து அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். சார் ஆட்சியராக இருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்ட அதே சிவகிருஷ்ணமூர்த்தியின் சிறப்பான செயல்பாடுகளை கண்டறிந்த அரசு, அவரை திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராகவே பின்னர் நியனனம் செய்தது.
கடிவாளம் போட்ட சிவகிருஷ்ணமூர்த்தி
அப்போது கூட நெல்லையில் வரைமுறையின்றி நடைபெற்ற டெண்டர் உத்தரவுகளுக்கு கடிவாளம் போட்டார். இதனால், ஆளுங்கட்சி கவுன்சிலர்கள், ஏன் மேயர் உள்ளிட்டோரின் கோபத்திற்கும் ஆளானார். ஆனால், அவர் நெல்லை மாநகராட்சி ஆணையராக இருந்தது வரை சட்டத்திற்கு புறம்பாக தன்னுடைய ஆளுகைக்குள் எதுவும் நடந்துவிடக்கூடாது என்ற உறுதியோடு சிவகிருஷ்ணமூர்த்தி செயல்பட்டதை அப்போது பலரும் பாராட்டியிருந்தனர். அதோடு, நெல்லை டவுன் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளையெல்லாம் அகற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தது அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை ஏற்படுத்திக் கொடுத்தது. அதேபோல,சிவகிருஷ்ணமூர்த்தி ஈரோடு மாநகராட்சி ஆணையராக செயல்பட்டபோது புகழ்பெற்ற கனி மார்கெட்டை நவீனமயமாக்கி, பிரச்னைகள் இன்றி வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கி கொடுத்ததும் அவருக்கு பெருமையை தேடித் தந்தது.
மழை நீர் வடிகால் பணிகளுக்கு முக்கியத்துவம் – தப்பித்த சென்னை
அதே நேரத்தில் சென்னை மாநகராட்சி துணை ஆணையராக அவர் பணியாற்றியபோது அன்றைய மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனுடன் இணைந்து மழை நீர் வடிகால் பணிகளை முறையாக செய்ததால், மழை காலங்களில் சென்னையில் பெருமளவு தண்ணீர் தேங்கும் பிரச்னைகள் குறைந்து மக்கள் நிம்மதியடைந்தனர்.
விழுப்புரத்தில் சிவகிருஷ்ணமூர்த்தி உருவாக்கிய சால்ட் திட்டம்
குறிப்பாக, 2020ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட உதவி ஆட்சியராக பணியாற்றியபோது மீனவ மக்களும் அந்த சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் திறன் மேம்பாட்டு வளர்ச்சியை ஊக்கும்விக்கும் விதமாக அவர் தொடங்கிய SALT என்ற Skill and Livelihood Training திட்டம் மீனவர்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியது. மீன்பிடித் தொழிலை தவிர வேறு ஏதுவுமே தெரியாத மீனவர்கள், இந்த திட்டத்தின் மூலம் படகுகள் பழுது பார்ப்பது உள்ளிட்ட திறன்களை வளர்த்துகொண்டனர். இதனால் அவர்களுக்கு ஓமன் உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு கிடைத்தது. இது மட்டுமின்றி, மீனவ பெண்களுக்கு அழகு கலைகள் பயிற்சி, தையல் பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் கொடுத்து அவர்களின் முன்னேற்றத்திற்கும் சிவகிருஷ்ணமூர்த்தி பெரிதும் உதவியிருக்கிறார்.
தேர்வு செய்த தமிழ்நாடு அரசு
இப்படிப்பட்ட துடிப்பான ஒரு இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரியைதான் தேனி மாவட்டத்தின் வளர்ச்சியையும் மேகமலை பிரச்னையை சரி செய்யும் முயற்சிக்காகவும் கண்டறிந்து ஆட்சியராக நியமித்திருக்கிறது தமிழ்நாடு அரசு.
ட்ரெண்டிங் செய்திகள்






















