Annamalai : ’அண்ணாமலையுடன் இணையப்போகும் முக்கிய அரசியல் புள்ளி’ இவர்தான் அவர்..!
’ஏற்கனவே பல அதிமுக நிர்வாகிகள் த.வெ.க-வில் இணைந்த நிலையில், அங்கு செல்ல விருப்பமில்லாதவர், எதிர்த்து அரசியல் செய்த திமுகவிற்கும் செல்ல முயற்சிக்காமல், அண்ணாமலையை நோக்கி செல்ல முயற்சித்திருக்கிறார்’

பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணமலை புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியிருக்கிறார். அவர் இயக்கம் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே பல லட்சம் பேர் உறுப்பினர்களாக அவரது இயக்கத்தில் இணைந்துள்ளனர். இந்நிலையில், தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளில் இருக்கும் முக்கிய தலைவர்கள் பலர் அண்ணாமலையுடன் கைகோர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
விஜய் VS அண்ணாமலை என மாறும் களம்
50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் திமுக – அதிமுக என இந்த இரண்டு திராவிட கட்சிகளே ஆட்சி அமைத்து வந்த நிலையில், அதனை மாற்றிக்காட்டியிருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். இந்த சூழலை பயன்படுத்தி, பாஜகவில் இருந்து வெளியேறி புதிய இயக்கத்தை தொடங்கியிருக்கிறார் அண்ணாமலை. பாஜகவில் அண்ணாமலை இணைந்தது முதல் அவருக்கென தனி ஆதரவு வட்டம் உருவானது. குறிப்பாக, அண்ணாமலையின் அதிரடி நடவடிக்கைகளாலும் அவரது செயல்பாடுகளாலும் இளைஞர்கள் அதிக அளவில் அவரால் ஈர்க்கப்பட்டனர். பாஜகவில் அவர் இருந்ததால் கொள்கை ரீதியாக அவருடன் பயணிக்க முடியாமல் பலரும் தவித்திருந்த நிலையில், அண்ணாமலை தனி அரசியல் இயக்கம் தொடங்கியதும் பெருவாரியான இளைஞர்கள் அவரது இயக்கத்தில் இணைந்து வருகின்றனர்.
இதனால் தமிழக அரசியல் களம் திமுக VS அதிமுக என்ற பாணியில் இருந்து விஜய் Vs அண்ணாமலை என்ற நிலைக்கு மாறிவருகிறது.
திமுக அதிமுக தலைவர்கள் அண்ணாமலையுடன் பேச்சு?
இதனையடுத்து, திமுக மற்றும் அதிமுகவின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் தலைவர்கள் அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் தொடங்கியதற்கு அவருக்கு தொலைபேசி மூலமாகவும் வாட்ஸ்-அப் வாயிலாகவும் வாழ்த்துச் சொல்லியிருக்கின்றனர். அதிலும் அண்ணாமலையுடன் இணைந்து பயணிப்பது குறித்தும் இரு கட்சிகளில் இருக்கும் முக்கியத் தலைவர்கள் சிலர் அவருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவின் நிர்வாகிகள் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வரும் நிலையில், அதில் இணைய விரும்ப இல்லாதவர்களும் அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் மீது அதிருப்தியில் இருக்கும் அதிமுக நிர்வாகிகளும் அண்ணாமலையுடன் இணைந்து பயணிக்க முடிவெடுத்துள்ளனர்.
அண்ணாமலையுடன் இணைந்து பயணிக்கும் சி.விஜயபாஸ்கர்
குறிப்பாக, அதிமுக முன்னாள் அமைச்சரும் புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கிய முகமாகவும் தொடர்ந்து விராலிமலைத் தொகுதியில் வெற்றி பெற்று வருபவருமான சி.விஜயபாஸ்கர், அண்ணாமலை இயக்கத்தில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து எஸ்.பி.வேலுமணியோடு சி.விஜயபாஸ்கரும் அவருக்கு எதிராக போர்கொடி தூக்கிய நிலையில், விஜயபாஸ்கரை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. பல கட்ட சமரச பேச்சுவார்த்தைக்கு பின்னர் வேலுமணியுடன் சென்று மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும் வேலுமணி, விஜயபாஸ்கர் உள்பட யாருக்கும் பறிக்கப்பட்ட பொறுப்பை திருப்பிக் கொடுக்கவில்லை எடப்பாடி பழனிசாமி. இதனால் கடும் அதிருப்தியில் இருந்த விஜயபாஸ்கருக்கு அண்ணாமலையின் புதிய அரசியல் இயக்கம் புதுத் தெம்பைக் கொடுத்திருக்கிறது. விரைவில் அவர் அண்ணாமலையுடன் இணைவது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என அவருடைய ஆதராவாளர் தரப்பில் பேசப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டையின் முடிசூடா மன்னன்
அதிமுகவில் கள எதார்த்தத்தை அறிந்து அதற்கு ஏற்றவாறு செயல்படக்கூடியவரும் மாறும் சூழலுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்து சோஷியல்மீடியா உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் களமாடக் கூடியவருமான விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்டத்தின் முடிசூடா மன்னராக தொடர்ந்து இருந்து வருகிறார். அதே நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் அறியப்பட்ட அதிமுக முகங்களில் முக்கிய முகமாக விஜயபாஸ்கர் இருக்கும் நிலையில், அவர் அண்ணாமலையுடன் இணைந்து செயல்படுவது இருவருக்குமே பெரிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக – தவெகவிற்கு செல்ல விரும்பாத சி.விஜயபாஸ்கர்
பல ஆண்டு காலமாக திமுகவை எதிர்த்து அரசியல் செய்துவிட்டு அதே திமுகவில் சென்று இணைய விஜயபாஸ்கருக்கு விருப்பமில்லையென்றும் அவர் இணைவதை அந்த மாவட்டத்தின் திமுக முகங்களான ரகுபதி, மெய்யநாதன் உள்ளிட்டோர் விரும்பவும் மாட்டார்கள் என்பதால் எடப்பாடி மீது அதிருப்தி இருந்தும் அவர் திமுகவிற்கு செல்ல முயற்சிக்கவில்லை. அதே நேரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தில் ஏற்கனவே அரை டஜன் அதிமுகவினர் சென்று இணைந்துவிட்ட நிலையில், விஜயபாஸ்கர் அங்கு சென்றால் அவருக்கான முக்கியத்துவமும் மரியாதையும் கிடைக்குமா என்பதும் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கும் நிலையில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்ற அடையாளும் தமிழ்நாட்டில் இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கும் கொண்டுள்ள அண்ணாமலையுடன் இணைந்து பயணிக்க சி.விஜயபாஸ்கர் முடிவு எடுத்திருப்பதாக நம்பந்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
Before You Go
RS Bharathi vs Minister Ramesh : "சாதியை வைத்து பிழைக்கும் பழக்கம் எனக்கு இல்ல" RS பாரதியை வெளுத்த அமைச்சர்
ட்ரெண்டிங் செய்திகள்






















