திரைத்துறையில் மிகப்பெரிய ஹூரோவாக இருந்த விஜய், திடீரென அரசியல் கட்சியை தொடங்கி அரசியலில் குதிப்பார் என்று பெரிதாக யாருமே கணிக்கவில்லை. இருப்பினும், கோடிக் கணக்கான ரூபாய் புரளும் திரைத்துறையை தூக்கிப்போட்டுவிட்டு, தமிழ்நாட்டு மக்களுக்காக கட்சியை தொடங்கி, தேர்தல் அரசியலில் குதித்த விஜயை கண்டு பலரும் எள்ளி நகையாடினர். ஆனால், வெற்றியை மட்டுமே இலக்காக கொண்டு களமிறங்கிய விஜய், தன்னுடைய ஒவ்வொரு நகர்வையும் திட்டமிட தனி டீமே அமைத்திருந்தார். யார் என்ன விமர்சனம் வைத்தாலும் அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல், தன்னுடைய இலக்கை நோக்கி அவர் பயணிக்க உதவியது அவர் நியமித்த டீம்.
யார் இந்த கபில்சாஹூ?
அப்படி தனது தேர்தல் வியூக பணிக்காக அவர் நியமித்த முக்கியமான நபர் தான் கபில்சாஹூ. ஐ பேக் என்ற பிரபல முன்னணி தேர்தல் வியூக வகுப்பு நிறுவனத்தில் முக்கிய பங்காற்றிய கபில்சாஹூ இரண்டு வருடத்திற்கு முன்னர் 12 பேர் கொண்ட தனது டீமுடன் அங்கிருந்து வெளியேறினார். அதன்பின்னர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான பிரச்சார வியூகத்தை செயல்படுத்தி அதில் பெரும் வெற்றி கண்டவர். அதேபோல, அவரும் அவரது அணியினரும் 2019ஆம் ஆண்டு சிக்கிம் மாநில தேர்தலில் SDF கட்சிக்கான தேர்தல் வியூக வகுப்பை வகுத்துக் கொடுத்தார். அதனையடுத்து, 2020ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தலின்போது ராகவ்சதா என்ற வேட்பாளரின் தொகுதியை நிர்வகிக்கும் பொறுப்பையும் சிறப்பாக செய்தவர்.
உத்தரபிரதேசத்தில் ஆம் ஆத்மி வளர்ச்சிக்கு பங்காற்றியவர்
இதனையடுத்து, கபில் சாஹூவின் திறமையை கண்டடைந்த ஆம் ஆத்மி கட்சி, உத்தரபிரதேசத்தில் ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சிக்காகவும், கட்டமைப்பை வலுப்படுத்தவும் இவரை பொறுப்பாளராக நியமனம் செய்தது. இந்த தேர்தலுக்கான பணியின்போது டெல்லி முன்னாள் முதல்வர் ஆம் ஆத்மியின் நிறுவனருமான அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சேர்ந்து வியூக வகுப்பு பணிகளை மேற்கொண்டார். அதோடு, கர்நாடக முன்னாள் துணை முதலமைச்சர் அஸ்வத்நாராயணன் அலுவலகத்தை மேலாண்மை செய்யும் பொறுப்பையும் மேற்கொண்டு, டிஜிட்டல் உலகிற்கு ஏற்றவாறு அஸ்வத்நாராயணன் பணிகளை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டுச் சென்ற பெருமையும் கபில் சாஹூவிற்கு உண்டு.
கபில் சாஹூவை கண்டடைந்த விஜய்
இந்நிலையில், கபில் சாஹூவின் திறமையை கேட்டறிந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அவரை தன்னுடைய வியூக வகுப்பு அணியில் இணைத்துக்கொண்டு இந்த சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டிருந்தார். கபில் சாஹூ மற்றும் அவரது அணியினரின் வியூகங்கள் மற்றும் திட்டங்களையே தமிழக வெற்றிக் கழகம் களத்தில் செயல்படுத்தியது. குறிப்பாக, விஜயின் பேச்சு, அவர் முன்னெடுத்து பேச வேண்டிய பிரச்னைகள், எந்த இடத்தில் யாரை தாக்கி, எப்படி பேச வேண்டும் என்ற அனைத்து வகையான விஷயங்களையும் விஜய்க்கு ஆலோசனையாக கொடுத்தது இந்த டீம்தான். இதனையடுத்து, பாரம்பரியமான தமிழ்நாட்டு கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவிற்கு இந்த தேர்தலில் கபில் சாஹூ அணியினர் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து, விஜய் கட்சியை பெருவாரியான வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்.
