Fair Delimitation : ”அழைத்த மு.க.ஸ்டாலின் – தமிழ்நாட்டில் குவிந்த தலைவர்கள்” யார், யார் தெரியுமா..?
”தொகுதி மறுவரையறை தொடர்பாக கூட்டுக் குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுடன் குடியரசுத் தலைவரை சந்திக்க திட்டம்”

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறையை நியாயமாக நடத்திடக்க்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சி பிரதிநிகள் பங்கேற்கும் கூட்டு நடவடிக்கைக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு கட்சியின் தலைவர்கள் பங்கேற்று நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை தொடர்பாக பேசவுள்ளனர்.
யார், யார் பங்கேற்பு?
இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் மாநில முதல்வர்கள், பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் என மிக முக்கியான நபர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பின் பேரில் சென்னை வந்துள்ளனர். குறிப்பாக, கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மன் ஆகியோரும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
மேலும், தெலுங்கா மாநில TRS கட்சியின் செயல் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ராமாராவ், ஒடிசா மாநில முன்னாள் அமைச்சரும் பிஜூ ஜனதா தள கட்சியின் பிரதிநிதியுமான சஞ்சய் குமார் தாஸ், சிரமோணி அகாலிதளத் தலைவரும் முன்னாள் எம்.பியுமான சர்தார் பல்வந்தர் சிங், கேரள காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சுதாகரன் உள்ளிட்ட 14 பேர் முதல்வர் தலைமையிலான இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.
என்ன பேசப்படுகிறது ?
மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களுக்கான நாடாளுமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்ய மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ள நிலையில், தென்மாநிலங்கள் மற்றும் பாஜக ஆளாத மாநிலங்களில் இந்த அடிப்படையை வைத்து தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக இந்த கூட்டம் இல்லையென்றும் நியாயமான தொகுதி சீரமைப்பை மத்திய பாஜக அரசு அமல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தவே இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவரை சந்திக்கத் திட்டம்
இந்நிலையில், இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களுடன் குடியரசுத் தலைவரை சந்திக்கவும் நியாயமான தொகுதி மறுவரையறை கூட்டுக் குழுவினர் முடிவெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.