அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அரசியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அக்கட்சி நிர்வாகிகள் ஒன்றன் பின் ஒன்றாக விலகி வருகிறார்கள். ஏற்கனவே அதிமுக மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள்,  6 அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது ராஜினாமா செய்து அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர். இந்த நிலையில், மற்றொரு முன்னாள் அமைச்சர் வைகை செல்வனும் அதிமுகவில் இருந்து விலகியுள்ளார். 

Continues below advertisement

அதிமுகவில் இருந்து விலக காரணம் என்ன.?

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்கிறேன் என கூறியுள்ளார். மேலும் ஒரு தலைவர் தானே அழிந்தால் கூட தனது கொள்கைகளும், இயக்கமும் வெற்றி பெற வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், இயக்கமும், கழகத் தொண்டர்களும் அழிந்தால் கூட தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் நல்ல தலைவராக இருப்பதில்லை.

திமுகவோடு இணைத்து ஆட்சியமைக்க திட்டமிட்டதன் மூலம், திமுக எதிர்ப்பு நிலையில் இருந்து அதிமுக சமரச போக்கில் போனதால் தனது அடையாளத்தை இழந்து விட்டது. சரியான நேரத்தில் தவறான முடிவெடுப்பதன் காரணமாகவும், தனது வெற்றிப் பாதையில் இருந்து அதிமுக விலகிச் சென்று விட்டது.மேலும், தேர்தல் களத்தில் நான் தனித்து விடப்பட்ட நிலையிலும் கூட. கழகத்திற்காக தேர்தல் பரப்புரையாற்றினேன். ஆனால், மரணத்தை விடக் கொடியது புறக்கணிப்பு என்பதை நான் உணாந்து கொண்டேன்.

Continues below advertisement

வைகை செல்வன் ஆதங்கம்

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர் வாழ்வதைவிட, அவ்வாறு செய்யாததால் கெட்டான் என்று சொல்லப்படுதல் நன்று என்கிற வள்ளுவப் பேராசானின் வார்த்தைகளுக்கு நான் கீழ் படிகிறேன். மாணவப் பருவம் தொட்டு ரத்தமும், சதையுமாக இருந்து இந்த இயக்கத்தோடு பணியாற்றி தற்போது விலக வேண்டிய சூழ்நிலையை எண்ணிப் பார்க்கையில், என் மனதில் ஏற்படும் கடுமையான வலியை வார்த்தைகளால் வடிக்க முடியவில்லை.

நேரம் வருகிற போது இன்னும் இதுகுறித்து பேசுகிறேன். 'புதிய இடத்தில் நடுவதற்கு புடுங்கிப் போன செடியில் இருக்கும் பழைய மண்ணைப் போல' இந்த இயக்கத்திற்காக ஆற்றிய என் பழைய நினைவுகளை என்ன செய்வது என்று எனக்கே தெரியவில்லை என வைகை செல்வம் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.