EPS ADMK : அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள்- இபிஎஸ் பேசியது என்ன.? வெளியான ரகசிய தகவல்
EPS ADMK: உட்கட்சி மோதலால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி முக்கிய உத்தரவிட்டுள்ளார்.

இரண்டாக பிளவுப்பட்ட அதிமுக
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் அதிமுக அல்லது திமுக ஆட்சியை கைப்பற்றும் என கருத்து கணிப்பு வெளியான நிலையில், அனைத்தையும் உடைத்து நடிகர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கைப்பற்றியது. அதே நேரம் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுக கூட்டணி கட்சியாக இருந்த காங்கிரஸ் முதல் ஆளாக ஆதரவு தெரிவித்தது. இதனையடுத்து கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் உதவியோடு ஆட்சி அமைத்தது. அதே நேரம் தவெக ஆட்சி அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் வகையில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 25 எம்எல்ஏக்கள் தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
இதன் காரணமாக அதிருப்தி அடைந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 28 மாவட்ட செயலாளர்களின் கட்சி பதவியை விட்டு நீக்கி அதிரடி உத்தரவிட்டார். இந்த நிலையில் இரு தரப்பும் நேருக்கு நேர் மோதி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 80 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, பதவிக்காக சிலர் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு சென்றுள்ளார்கள். கட்சிக்கு தேர்தல் வெற்றி தோல்வி என்பது சகஜம். கட்சி என்றும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த இக்கட்டான சூழலில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இபிஎஸ் பேசியது என்ன.?
அடுத்தாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்கள் சிறப்பாக செயல்படுங்கள் என அறிவுரை வழங்கியவர், குறைகளை களைந்து கட்சியை வளர்க்க ஒவ்வொரு மாவட்டம் வாரியாக தனி தனியாக விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாகவும் அந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதனிடையே கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட செயலாளர்கள், தங்களது மாவட்டத்தில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்து கையெழுத்து போட்ட படிவங்களை சமர்பித்துள்ளனர். முன்னதாக நிர்வாகிகள் பேசும் போது பதவி ஆசைக்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டது சரியானது தான் என இபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்தனர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















