சேலம் மாநகர் நெடுஞ்சாலை நகரில் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தென்காசியை சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 100 பேர் கட்சியில் இணைந்தனர். இதைதொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, தென்காசி சேர்ந்த அய்யாதுரை பாண்டியன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து 100 பேர் அதிமுகவில் இணைந்தனர். விரைவில் 10 ஆயிரம் பேர் இணைப்பு விழா தென்காசியில் நடைபெற உள்ளது. அதிமுக உட்கட்சித் தேர்தல் குறித்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 



சிலர் தடையாணை கேட்டிருப்பதால் விசாரணை முடியும் வரை பொதுச்செயலாளர் தேர்தலையே, பொதுக்குழுவையும் கூட்ட மாட்டோம் என்று நீதிமன்றத்தில் உறுதி அளித்திருப்பதாக தெரிவித்தார். சென்னை மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் அரசு பணிகள் மெத்தனமாக நடைபெற்று வருகிறது.அதிமுக ஆட்சியில் அறிவித்த திட்டங்களை தான் திமுக அரசு தொடங்கி வைத்து செயல்படுத்தி வருகிறது. அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டது. கோவையில் 48 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகளுக்கு 11 முறை ஒப்பந்தம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு கமிஷன் பிரச்சனையே காரணம் என்றார். சொத்துவரி 100 சதவீதம், மின்கட்டணம் 53 சதவீதம், கடைவாடகை 150 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 



ஏற்கனவே கொரோனா காலத்தில் இருந்து பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து இயல்புநிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் மின் கட்டணம், சொத்து வரி உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று ஸ்டாலின் மற்றும் உதயநிதி வாக்குறுதிகளை அறிவித்திருந்தனர். ஆனால் இதுவரை நீட் தேர்விற்காக எதுவும் செய்யவில்லை எந்த போராட்டமும் நடத்தவில்லை ஆனால் நாடாளுமன்றத்தில் காவிரி பிரச்சனை உள்ளிட்ட தமிழக பிரச்சினைக்காக அதிமுக சார்பில் 22 நாட்கள் நாடாளுமன்ற அவையை முடக்க செய்தோம். தமிழக மக்களின் உரிமைக்காக அதிமுக குரல் கொடுத்தது. ஆனால் திமுக எதற்கும் போராடவில்லை என்றும் கூறினார்.