தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க தனித்துப்போட்டியிட்டது. `அ.தி.மு.க உடன் நடத்திய இடப் பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தை வெற்றியடையாத காரணத்தால்,  பாஜகவினரும் அதிக இடங்களில் போட்டியிட விரும்பியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.


ஆனால், தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு எதிர்பார்த்த மகிழ்ச்சியை வழங்கவில்லை. பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் வானதி சீனிவாசன் தொகுதியான கோயம்புத்தூரில் கட்சி பெரும் தோல்விதான் மிஞ்சியது. இருப்பினும், பாஜக கட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் இடங்கள் நம்பிக்கை அளிப்பதாக மாநில தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


தேர்தல் அனுபவம், அதிமுக உடனான கூட்டணி போன்றவைகள் குறித்து ஆங்கில நாளிதழ் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு அண்ணாமலை அளித்த பேட்டியின் சாராம்சத்தை இக்கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.


கேள்வி: தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?


பதில்: இது தொடக்கம்தான். என்னை பொறுத்தவரையில், தமிழக மக்கள் வெகு நாட்களுக்கு முன்னரே பாரதிய ஜனதா கட்சியை ஏற்றிக்கொள்ள தொடங்கி விட்டனர். அதனால், இந்தத் தேர்தலில் எங்கள் செயல்திறன் குறைந்துவிட்டது என்ற முறையில் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என கருதுகிறேன். தற்போது ஆட்சிப் பொறுப்பில் உள்ள திமுக அரசு பணியேற்று எட்டு மாதங்களே ஆகின்றன. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில், மக்கள் ஆளும் கட்சியை நிராகரித்துவிட்டு, எங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. நாங்கள் கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தாலும் சரி, தனித்துப்போட்டியிட்டாலும் சரி, வெற்றி பெறும் வாய்ப்பு எங்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. ஆனால், எங்களால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை அதிகம் உள்ளது 


கேள்வி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெற்ற வெற்றி, கோவையில் படுதோல்வி குறித்து?


பதில்: சில காலங்களாகவே அதிமுக-பாஜக கூட்டணி என்பது அந்தந்த கட்சிகளின் நலனுக்கு பாதகமாகவே இருந்து வருகிறது. 1998 மற்றும் 1999 லோக் சபா தேர்தலில் எங்கள் கட்சியின் போட்டியிடும் திறன் குறைந்துவிட்டதாக உணர்கிறேன். கூட்டணியில் போட்டியிடும்போது, சவால்களை எதிர்த்து போட்டியிடும் குணம் குறைந்துவிடும். தனித்துப்போட்டியிடும்போது ஒரு புது சக்தி கிடைக்கும். கோவையில் பாஜக ஐந்து முதல் ஏழு இடங்களைக் கைப்பற்றும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நடக்கவில்லை. இந்தத் தேர்தலில் அதிமுகவை சில இடங்களில் தோற்கடித்துள்ளோம். அதிமுகவும் எங்களை தோற்கடித்துள்ளது. கூட்டணியில் இருந்தால் இது சாத்தியமில்லை. நான் கட்சியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறேன். இப்போது அதே உணர்வோடு கோவையில் பாஜகவின் வலிமையை கட்டி எழுப்ப நினைக்கிறேன். கன்னியாக்குமரியை எடுத்துக் கொண்டால், கடந்த 20 ஆண்டுகளாக நாங்கள் அங்கு முதலிடத்தில் இருக்கிறோம். மேலும், இதே நிலை தென்காசி, தேனி மற்றும் மதுரையிலும் நடக்க தொடங்கியிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.


கேள்வி: எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறுமா?


பதில்: பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைக்கவில்லை. இந்தியாவை உலகறிய செய்ய வேண்டும் என்பதே எங்களின் முதன்மையான கொள்கை. அப்படி இருக்கையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் வாகை கூட வேண்டும் என எதிர்ப்பார்க்கிறோம்.


கேள்வி: அதிமுக கட்சியில் சரியான தலைவர் இல்லை என்று நினைக்கிறீர்களா?


பதில்:ஒரு கூட்டணி கட்சியாக அதிமுக வலுமையுடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் அவர்கள் உள் கட்சி சார்ந்த பிரச்சனைகளை ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் தான் பேசித் தீர்க்க வேண்டும். இதில் நாங்கள் தலையிட முடியாது. இது அவர்கள் கட்சிக்குள் நடப்பது. 


கேள்வி: நகர்மன்ற தேர்தல்போது பாஜக கட்சி பரிசுப் பொருட்கள் வழங்கியதா?


பதில்: பாரதிய ஜனதா கட்சியின் சித்தாந்தம் நல் அறங்களைப் பின்பற்றுவது. வாக்குக்கு பணம் கொடுப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. இந்த கலாச்சாரம் தமிழகத்தில் அச்சுறுத்தும் ஒன்றாக இருக்கிறது. மாநில தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் பார்வையாளராக மட்டுமெ மெளனம் காப்பத்து ஆபத்தானது. வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருள் வழங்கும் நடைமுறைக்கு தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை. 


நாங்கள் 45% இடங்களில் போட்டியிட்டோம். 5.5% வாக்குகளைப் பெற்றுள்ளோம். எங்களுக்கு தேவைப்பட்ட 20% இடங்களை அதிமுக தர மறுத்துவிட்டது. அவர்களுக்கு இருந்த பல காரணங்களுக்காக 10%-12% இடங்களை மட்டுமே எங்களுக்கு ஒதுக்குவதாகக் கூறினார்கள். அதனால் நாங்கள் தனித்துப்போட்டியிட்டோம். தமிழகத்தில் பாஜக மக்களின் நம்பிக்கை பெற்ற ஒரு கட்சியாக இருக்கிறது என்பதே உண்மை.