waqf amendment bill 2025: இந்திய அரசியல் பரபரப்பாகவே இயங்கி வருகிறது. குறிப்பாக, மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது முதலே அவ்வப்போது பல்வேறு அதிரடி சட்டங்கள், சட்டத்திருத்தங்களால் பரபரப்பாகவே காணப்படுகிறது. தற்போது, இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியிருப்பது வக்ஃப் சட்டத்திருத்த மசோதா.
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா:
இஸ்லாமியர்களின் நலனுக்காக நன்கொடையாக வழங்கப்படும் சொத்துக்களை பராமரிப்பதே இந்த வக்ஃப் வாரியம். 1995ம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் வக்ஃப் வாரிய சட்டத்தில் மாற்றம் கொண்டு வர மசோதா நிறைவேற்றியுள்ளது. மக்களவையிலும் மாநிலங்களவையிலும் இதற்கான மசோதா மத்திய பாஜக அரசால் வெற்றிகரமாக நிறைேவற்றப்பட்டுள்ளது.
பா.ஜ.க. பக்கம் நிற்காத அரசியல் கட்சிகள்:
5 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமியர்களாக இருப்பவர் மட்டுமே வக்ஃப் வாரியத்திற்கு நன்கொடை அளிக்க முடியும், வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களும் உறுப்பினராக இருக்க வேண்டும் போன்ற விதிகள் காரணமாக எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, தமிழ்நாட்டில் பா.ஜ.க., ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் நியமன எம்பி இளையராஜா தவிர மற்ற அனைத்து கட்சிகளும் இந்த மசோதாவிற்கு எதிராக செயல்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மதநல்லிணக்கத்தில் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக உள்ளது. வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா விவகாரத்திலும் மக்களவையில் தமிழ்நாட்டின் எதிரெதிர் துருவங்களான திமுக-வும், அதிமுக-வும் பா.ஜ.க.விற்கு எதிராகவே வாக்களித்துள்ளன. மேலும், மதிமுக தலைவர் வைகோவும் தனது எதிர்ப்பை மக்களவையில் பதிவு செய்துள்ளார். பா.ஜ.க.வின் கூட்டணியில் உள்ள பாமக-வின் தலைவரான அன்புமணி ராமதாசும் பா.ஜ.க.விற்கு ஆதரவாக வாக்களிக்காமல் வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளார்.
பாஜக-விற்கு நெருக்கடி:
சிறுபான்மையினர் நலனைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களது அரசியல் கருத்து வேறுபாட்டை கடந்து பா.ஜ.க.விற்கு எதிரான நிலைப்பாட்டை கையில் எடுத்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் மட்டும் பாஜக தனித்து விடப்பட்ட நிலை தொடர்கிறது. இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலத்தில் பா.ஜ.க.வின் ஆட்சி நடந்து வரும் நிலையில், தமிழ்நாடு பாஜக-விற்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.
மாநில கட்சிகளின் ஆதிக்கமே தமிழ்நாட்டில் அரை நூற்றாண்டிற்கும் மேலாக இருந்து வரும் நிலையில், பா.ஜ.க. உள்ளிட்ட தேசிய கட்சிகள் தமிழ்நாட்டில் மாநில கட்சிகளின் தயவின்றி அரசியல் செய்ய முடியாத நிலையிலே உள்ளது. சிறுபான்மை மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழ்நாட்டில் அவர்களின் வாக்குகளுக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு எப்போதும் மாநில கட்சிகள் ஆதரவு அளிப்பதில்லை. இதன் காரணமாகவே தற்போதும் வக்ஃப் வாரிய சட்டத்தில் பாஜக-வின் பக்கம் தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் நிற்க மறுத்துள்ளது.
தமிழ்நாட்டில் பா.ஜ.க.விற்கு எதிரான மனநிலை உள்ள நிலையில், இந்த வக்ஃப் வாரிய சட்டத்திருத்த விவகாரம் மேலும் அதை அதிகப்படுத்தியுள்ளது.