DMK Youth Wing : ’மீண்டும் மு.க.ஸ்டாலினே முதல்வர்’ உறுதியெடுத்த திமுக இளைஞரணி..!
"வாக்குச்சாவடிகளுக்கே முகவர்கள் போடமுடியாத கட்சிகள் தமிழ்நாட்டில் இருக்க, 5 லட்சம் நிர்வாகிகள், 50 லட்சம் உறுப்பினர்கள் என பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது திமுக இளைஞரணி”

நாளை திமுக இளைஞரணியின் பிரம்மாண்ட மாநாடு விருதுநகரில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு அனைத்து ஊடகத்தினருக்கும் அழைப்பு விடுத்தும் இளைஞரணியை குறித்து விவரித்தும் அந்த அணி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அழைப்பு அறிக்கை வெளியிட்ட அன்பகம்
அதில், ”அன்புடையீர் வணக்கம். 75 ஆண்டுகளைக் கடந்து தமிழர்களின் மேம்பாட்டை முன்னிறுத்தி தன் அரசியல் பயணத்தை மேற்கொள்ளும் திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு எப்போதும் பக்கபலமாக இருப்பது, கழக இளைஞர் அணி. 1980ல் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழிகாட்டலில், இன்றைய கழகத்தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட கழக இளைஞர் அணி, கழகத்துக்கு வலிமை சேர்த்து களத்தில் தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இன்று தமிழ்நாடு முழுவதும் தலைமைக்கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என கணிசமான கழக செயல்வீரர்கள் இளைஞர் அணி பாசறையில் பட்டை தீட்டப்பட்டவர்களே.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கொள்கைகளைத் திசையெங்கும் கொண்டு செல்லும் கருத்தியல் பணிகள் ஒருபுறம், கட்டமைப்பை வலுப்படுத்தி கழகத்தின் வெற்றிகளுக்குத் துணைநிற்கும் அரசியல் பணிகள் இன்னொருபுறம் என்று இடைவிடாது இயங்கிக்கொண்டிருக்கிறது இளைஞர் அணி.
இளைஞரணியின் செயல்பாடுகள் என்ன ?
கழக இளைஞர் அணி செயலாளராக மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற நாளில் இருந்து திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டங்கள், சட்டமன்றத்தொகுதிதோறும் கலைஞர் நூலகம், திராவிட இயக்க வரலாற்றுச் சுவடுகளைப் பதியும் ‘முரசொலி பாசறை பக்கம்’, வரலாற்றை நினைவுகூர்ந்து வாசிப்பை விரிவு செய்யும் ‘முத்தமிழறிஞர் பதிப்பகம்’, திசையெங்கும் திராவிடத்தைக் கொண்டுசேர்க்கும் 200க்கும் மேற்பட்ட இளம் பேச்சாளர்கள், 75 ஆண்டுக்கால தி.மு.க வரலாற்றுப்பங்களிப்புகளை 1120 பக்கங்களில் விவரிக்கும் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூல், சமீபத்தில் தமிழ்நாடே கொண்டாடிய அறிவுத்திருவிழா, முற்போக்கு புத்தகக்காட்சி என்று இளைஞர் அணி தொடர்ந்து கருத்தியல் பணிகளை ஆற்றி வருகிறது.
போராட்டங்களில் இளைஞரணியின் பங்கு
இன்னொருபுறம் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம், நீட் தேர்வை ஒழிக்க வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம், நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கம், தொகுதி மறுசீரமைப்பு - இந்தி திணிப்பு எதிர்ப்பு - நிதி ஒதுக்குவதில் ஒன்றிய அரசின் பாரபட்சம் ஆகியவற்றைக் கண்டித்து தெருமுனைக்கூட்டங்கள் என்று மக்கள் பிரச்சினைகளுக்காகவும் கழக இளைஞர் அணி தொடர்ந்து களத்தில் நிற்கிறது என்றால் அதற்கு காரணம், இளைஞர் அணியின் வலுவான கட்டமைப்பே.
வழக்கமான நிர்வாக அமைப்புடன் இந்த ஆண்டு கழகத்தலைவர் வழிகாட்டலில், இரண்டு புதிய முன்னெடுப்புகளையும் கழக இளைஞர் அணி மேற்கொண்டிருக்கிறது. இளைஞர் அணியின் சமூகவலைதளப் பக்கங்களை நிர்வகிப்பதற்கு என்று ஒவ்வொரு கழக மாவட்டத்திலும் சமூகவலைதளங்களுக்கான துணை அமைப்பாளர்களை நியமித்துவருகிறோம்.
ஒன்றியத்துக்கு உள்பட்ட கிளைகளிலும் நகர, பகுதி, பேரூர், வார்டுகளிலும் அனைத்து பாகங்களிலும் இளைஞர் அணிக்கு நிர்வாகிகளை நியமித்திருக்கிறோம். இப்படி, தமிழ்நாடு முழுவதும் 5 லட்சம் இளைஞர் அணி நிர்வாகிகளைக் கொண்ட வலுவான அணியாக தமிழ்நாட்டின் எல்லாத்திசைகளிலும் வேர்விட்டிருக்கிறது கழக இளைஞர் அணி.
5 லட்சம் நிர்வாகிகள் 50 லட்சம் உறுப்பினர்கள்
இவ்வாறு 5 லட்சம் நிர்வாகிகள், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் என்று வலுவான கட்டமைப்பைக் கொண்டு செயற்படும் இளைஞர் அமைப்பு, இந்திய அளவில் தி.மு.க இளைஞர் அணி மட்டுமே. பல அரசியல் கட்சிகள் வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பதற்கே திணறிக்கொண்டிருக்கும் சூழலில், அனைத்து பாகங்களிலும் நிர்வாகிகளை நியமித்திருப்பது கழக இளைஞர் அணியே.
இப்படி நியமிக்கப்பட்ட 5 லட்சம் நிர்வாகிகளை ஒன்றிணைத்து மண்டலம்தோறும் நிர்வாகிகள் சந்திப்பை நடத்த வேண்டும் என்ற கழகத்தலைவர் உத்தரவின்பேரில், முதற்கட்டமாக வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பை 14.12.2025, ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் திருவண்ணாமலை கலைஞர் திடலில் எழுச்சியுடன் நடத்தினோம். 1.50 லட்சம் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பு
அதன் அடுத்த கட்டமாக தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பை 07.02.2026, சனிக்கிழமை அன்று மாலை 3 மணியளவில், விருதுநகர் – கல்குறிச்சியில் நடத்தவிருக்கிறோம். இந்த ‘தென் மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்’பில் கழகத்தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சிறப்புரை ஆற்றவிருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மீண்டும் மு.க.ஸ்டாலினே முதல்வர் – கட்டியங்கூறும் இளைஞரணி
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகத்தலைவரே மீண்டும் முதலமைச்சர் ஆவார், திராவிட மாடல் ஆட்சியே தொடரும் என்னும் வெற்றிச்செய்திக்கு அடித்தளமாக இந்த ‘இளைஞர் அணி மண்டல நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும் என்பது உறுதி.
இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் - ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு தென் மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியை தங்கள் பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் வெளியிட்டு உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என அந்த அழைப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.























