தேர்தலுக்கு தயாராகும் விஜய்

சட்டமன்ற தேர்தலை தமிழகம் எதிர்நோக்கியுள்ளது. இன்னும் 4 மாத காலம் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. திமுக- அதிமுக மட்டுமே கடந்த அரை நூற்றாண்டு காலமாக தமிழகத்தில் ஆட்சி அமைத்து வரும் நிலையில், அதனை மாற்றி அமைக்கும் வகையில் திரைத்துறையில் இருந்து அரசியலில் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என தனது கட்சிக்கு பெயர் சூட்டிய விஜய், விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் இரண்டு மாநில மாநாட்டை நடத்தி அசத்தியுள்ளார். அடுத்ததாக மக்களை நேரடியாக சந்திக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டமாக செல்ல சுற்றுப்பயணத்தை அமைத்திருந்தார்.

Continues below advertisement

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு

திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தனது பிரச்சாரத்தை விஜய் முடித்த நிலையில், கரூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அளவுக்கதிகமான மக்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சி அடைய செய்த நிலையில், கடந்த இரண்டு மாதமாக எந்த வித நிகழ்வுகளிலும் விஜய் கலந்து கொள்ளாமல் அமைதி காத்துவந்தார். இதனையடுத்து கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தை சேர்ந்தர்களை சென்னைக்கு அழைத்து வந்து விஜய் ஆறுதல் தெரிவித்திருந்தார். எனவே அடுத்தகட்ட பிரச்சாரம் தொடர்பாக விஜய்  என்ன முடிவு எடுக்கப்போகிறார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில் மீண்டும் பிரச்சாரம்

அந்த வகையில் மீண்டும் பொதுமக்களை சந்திக்கும் வகையில் பிரச்சார கூட்டங்களை நடத்த விஜய் முடிவு செய்துள்ளார்.  டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில் பிரச்சாரத்தை தொடங்குமாறு விஜய்யிடம் தவெக நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். இதனை விஜய் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே கரூர் சம்பவத்திற்கு பிறகு தனது பிரச்சார பயணத்தை சேலத்தில் தொடங்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. கடந்த முறை வார விடுமுறை நாட்களில் மட்டுமே பிரச்சார கூட்டங்களை விஜய் நடத்திய நிலையில் தற்போது வார நாட்களில் நடத்த இருப்பதாகவும் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலத்தில் பிரச்சாரத்தை தொடங்க காவல் ஆணையரிடம் தவெக தரப்பில் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement