கொரோனா தொற்றுநோயைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த ஆண்டு நடத்தப்படவில்லை. அடுத்தடுத்த அனைத்து அமர்வுகள் - பட்ஜெட் மற்றும் பருவமழை - கோவிட் காரணமாக குறைக்கப்பட்டது. இந்தநிலையில் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் நான்காவது வாரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டது. கடந்த மாதம் 29 ஆம் தேதி துவங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பல முக்கிய விவாதங்களும், பல முக்கிய சட்டங்களும் இயற்றப்படும் என்று நாடே எதிர்பார்த்து காத்திருந்தது. ஆனால் தொடர்ச்சியாக விவசாய போராட்டம், 12 எம்பிக்கள் சஸ்பெண்ட், ஓமிக்ரான் பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவையில் கடந்த இரண்டு வாரமாக அமளி காணப்பட்டு வருகிறது. நவம்பர் 29 -ம் தேதி கூட்டத்தொடர் தொடங்கி டிசம்பர் 23 ஆம் தேதியுடன் முடிவடையும் கூட்டத்தொடரில் சுமார் 20 அமர்வுகளைக் கொண்டு கிறிஸ்துமஸுக்கு முன்னதாக முடிவடைகிறது.



மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் ஒரே நேரத்தில் அமர்வுகள் இருந்தாலும் உறுப்பினர்கள் சமூக விலகல் விதிமுறைகளைப் பின்பற்றி அவை நடந்து வருகின்றன. 2024 பொதுத் தேர்தலுக்கான அரையிறுதியாகக் கருதப்படும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரபிரதேசம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறுவதால் எந்த அளவுக்கு முன்னணி தலைவர்கள் அதில் கூட்டத்தொடரில் கலந்துகொள்வார்கள் என்ற ஐயம் முன்பிருந்தே எழுந்து வந்தது. அதே போல பிரதமர் மோடி இதுவரை ஒரே ஒரு நாள் மட்டுமே கூட்டத்தொடரில் பங்கேற்று இருக்கிறார். அதுவும் தொடங்கி வைத்த முதல் நாள் மட்டுமே கலந்து கொண்டிருந்திருக்கிறார். அதனை குறிப்பிடும் விதமாக இன்று நாடாளுமன்றத்திற்கு கன்னியாகுமாரி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் ஒரு போர்டுடன் சென்றுள்ளார்.






அந்த போர்டில், பிரதமர் மோடி குளிர்கால கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ளாரா இல்லையா என்னும் வருகை பதிவேட்டை தங்கியுள்ளது. அதில் தேதி வாரியாக ஆப்சென்ட், ப்ரெசென்ட போடப்பட்டுள்ளது. அதன்படி பிரதமர் மோடி கூட்டத்தொடர் துவங்கிய முதல் நாள் மட்டுமே அவைக்கு வந்துள்ளார் என்று தெரிகிறது. இதுவரை நடைப்பெற்றுள்ள 17 அமர்வுகளில் ஒரே ஒரு அமர்வில் மட்டுமே பங்கேற்ற அவர் 16 அமர்வுகளில் ஆப்சென்ட் ஆகியுள்ளார். அவரது வருகை சதவிகிதம் 5.88% ஆக இருக்கின்றது. இதனை வெளிப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் போர்டுடன் நிற்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதனை வெளியீட்டை அவர் எழுதியதாவது, "நாட்டின் தலைவரின் இருப்பு ஆரோக்யமான ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியம், அப்போதுதான் விவாதங்கள் ஒருங்கிணைந்த முறையில் நடைபெறும்" என்று எழுதியுள்ளார்.