விஜய் மாமனா, மச்சானா? தவெக போலி கடிதம்; அசல் எங்கே, யார் எடுத்தது? டிடிவி சரமாரி கேள்வி!
தவெக வெளியிட்டுள்ள வீடியோவில் உள்ள கடிதத்தின் உண்மை பிரதி எங்கே? காமராஜ் கையெழுத்து போடும் வீடியோவை எடுத்தது யார்? எங்கே எடுத்தார்கள்?- டிடிவி தினகரன் கேள்வி.

தவெக வெளியிட்டுள்ள வீடியோவில் உள்ள கடிதத்தின் உண்மை கடிதம் எங்கே? காமராஜ் கையெழுத்து போடும் வீடியோவை எடுத்தது யார்? எங்கே எடுத்தார்கள்? என்பன உள்ளிட்ட கேள்விகளை சரமாரியாக அடுக்கி உள்ளார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.
இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியதாவது:
’’தவெக வெளியிட்டுள்ள வீடியோவில் உள்ள கடிதத்தின் உண்மை பிரதி எங்கே? காமராஜ் கையெழுத்து போடும் வீடியோவை எடுத்தது யார்? எங்கே எடுத்தார்கள்?
அவர் கையெழுத்திட்ட வீடியோவை ஆளுநரிடம் இதுவரை ஒப்படைக்காதது ஏன்? காமராஜ் கையெழுத்திடும் வீடியோ ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். இதுதொடர்பான முழு வீடியோவை வெளியிட வேண்டும். அதன் மூலம் தவெகவினர் என்ன பேரம் பேசினார்கள் என தெரிந்துவிடும்.
என்னை பயமுறுத்தவும் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தவும் தவெக முயற்சி செய்து வருகிறது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தவெக மோசடி
ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மோசடி செய்கிறது தவெக. ஆதரவு கடிதத்தை எப்படி வெள்ளைத் தாளில் காமராஜ் எழுதி கொடுத்திருப்பார்? எனது ஒப்புதலோடு கடிதம் கொடுத்தார் என நிரூபிக்கத் தயாரா? 10 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளராக காமராஜ் உள்ளார். அவர் எப்படி தவெகவுக்கு ஆதரவு தருவார்? விஜய் எனக்கு மாமனா? மச்சானா?

நேற்று மாலைதான் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கும் கடிதத்தில் காமராஜ் கையெழுத்து இட்டார். இந்த நிலையில் தவெகவுக்கு ஆதரவு கொடுப்பதாகக் கோரிய கடிதத்தின் உண்மைத் தன்மையை தவெக உடனடியாக வெளியிட வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு தவெக பதில் சொல்ல வேண்டும்.
முதலமைச்சர் ஆகவே ஊழல்
முதல்வராகி ஊழலை ஒழிப்போம் என்றவர்கள், முதலமைச்சர் ஆகவே ஊழல் செய்கிறார்கள். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். இவை அனைத்துக்கும் பின்னணியில் விஜய் உள்ளார். அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுகே பேரழிவு ஏற்படும். ’’
இவ்வாறு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்து உள்ளார்.
எனினும் இதுகுறித்து தவெக தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்






















