திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த விஜயை பலரும் எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டார்கள். தமிழ்நாட்டில் புதிய புரட்சியை ஏற்படுத்துவார் என்றார்கள். ஆனால், அதனை திமுகவினரும், அதிமுகவினருமே மறுத்தனர். குறிப்பாக, திமுகவினர் விஜயை வரைமுறை இன்றி விமர்சித்தனர். திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவரெல்லாம் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியுமா? என்று கேட்டனர். ஆனால், இன்று அப்படி பேசியவர்கள் அத்தனை பேரும் வாய்மூடி மவுனியாக இருக்கிறார்கள். காரணம். மக்கள், மக்களின் முடிவு. தேர்தலில் மக்கள் விஜயைதான் ஆதரித்திருக்கிறார்கள். அவருக்குதான் வாக்களித்திருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆரான விஜய்

ஒரு பாட்டியிடம் யாருக்கு வாக்களித்தீர்கள் என்று கேட்டபோது பல்லெல்லாம் கொட்டிப்போன அந்த பாட்டி விசய்க்கு, விசிலுக்கு என்ற சொன்ன வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. எம்.ஜி.ஆரை எப்படி புகழுவார்களோ அதே மாதிரி விஜயை வயது வித்தியாசம் இல்லாமல் புகழ்ந்தார்கள். வெறும் புகழ்ச்சியோடு நின்றுவிடாமல், வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்திருக்கிறார்கள் என்றால் விஜயை இன்னொரு எம்.ஜி.ஆர்-ராகவே பார்த்திருக்கிறார்கள் மக்கள்.

விஜயை விமர்சித்தவர்கள் எங்கே ?

பேப்பர் இல்லாமல் விஜயால் ஒரு வார்த்தை பேச முடியுமா?, சினிமா டையலாக் மாதிரி பேச வேண்டியதை மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டு ஒப்பிக்கிறார் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எவ்வளவு விமர்சனக்கணைகளை கொண்டுவந்து அவர் மீது எய்தாலும், அதையெல்லாம் பிய்த்து எறிந்துவிட்டு, அரசியல் சாணக்கியராக, மக்களின் மனசாட்சியாக தேர்தலில் நின்று மாற்றிக்காட்டியிருக்கிறார் விஜய்.

மாற்றத்தை நோக்கி மக்கள்

50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக – அதிமுக என்ற இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே மாற்றி, மாற்றி வாக்களித்த மக்கள் சலிப்படைந்துவிட்டார்கள். ஒரு புதிய சக்தியாக, திரைத்துறை நாயகனாக விஜய் நேரடியாக அரசியலுக்கு வந்ததும் வராது வந்த மாமணியாக அவரைத் தேடிச் சென்று வாக்களித்து அங்கீகரித்திருக்கிறார்கள் மக்கள்.

வேட்பாளர்கள் யாரென்றே தெரியாமல் வாக்களித்த மக்கள்

234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களில் பெரும்பாலனோர் யாரென்றே மக்களுக்கு தெரியாது. அவர்கள் எல்லாம் விஜயின் முகத்திற்காக விஜயின் சின்னமான விசிலுக்காக மட்டுமே வாக்களித்திருக்கிறார்கள். ஆமாம், விஜய் திரைத்துறைக்கு மட்டும் பிராண்ட் அல்ல இனி தமிழ்நாட்டு அரசியலுக்கும் அவர்தான் பிராண்டு. அவர் முகம்தான் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அடுத்த 5 வருடத்திற்கான தமிழ்நாட்டிற்கும் அடையாளம் ; எதிர்காலம்.

மக்களின் நம்பிக்கையை காப்பாற்றி, தமிழ்நாட்டை முனேற்றுவாரா விஜய் ?