அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் , பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஓபிஎஸ் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 


கடந்தாண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள்  எடப்பாடி பழனிசாமியால் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுக்குழுவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.


இதில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு வெற்றியை கொடுத்தது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு  விசாரித்தது. இதில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக தீர்ப்பு அமைந்தது. இதனால் சற்றும் தளராமல் உச்சநீதிமன்றத்துக்கு சென்றார் ஓ.பன்னீர்செல்வம்.


அங்கு இந்த வழக்கில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சய் குமார்  தீர்ப்பு வழங்கினர். அதிமுக பொதுக்குழு தொடர்பாக அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்த நீதிபதிகள் அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்வதாகவும் தெரிவித்தனர். ஆனால் இந்த தீர்ப்பில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து குறிப்பிடப்படவில்லை. 


இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பு பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. அதேசமயம் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த இரண்டு வழக்கையும் தனி நீதிபதி குமரேஷ் பாபு விசாரணை நடத்தினார்.


இதில்  பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தகுதி, நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகவும், நிபந்தனைகளை நீக்கினால் தானும் போட்டியிட தயார் என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  அதேபோல் வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுவதை தடுக்கவே வழக்கு தொடரப்பட்டதாக இபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்ட நிலையில்  தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்தி வைத்தார். 


அதிமுக வழக்கைப் பொறுத்தவரை எப்போதும் தனி நீதிபதி வழங்கும் தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவே வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய வழக்கிலும் ஓபிஎஸ் ஆதரவாக தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.  அதேசமயம் தீர்ப்பு தங்களுக்கு எதிராக மாறினால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து இபிஎஸ் தரப்பும் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. 


இந்நிலையில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் , பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஓபிஎஸ் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு ஓபிஎஸ் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இபிஎஸ் வட்டாரம் வெடி வெடித்து ஆரவாரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.