Anbumani Ramadoss: ”யார் சொத்து, தூக்கிருவேன்” மேடையில் மகன் அன்புமணியை எச்சரித்த ராமதாஸ்? விசிக மீது அட்டாக்?
Anbumani Ramadoss: வன்னிய இளைஞர் மாநாட்டில் பாமக நிறுவனம் ராமதாஸ், மகன் அன்புமணியை மறைமுகமாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.

Anbumani Ramadoss: பாட்டாளி மக்கள் கட்சி தனிப்பட்டவர்களின் சொத்து அல்ல என, அதன் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வன்னிய இளைஞர் மாநாடு:
பாஜக உடன் கூட்டணி அமைப்பதில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே முரண்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது. இதன் விளைவாகவே இனி தானே பாமகவின் தலைவராக செயல்படுவேன் என்று ராமதாஸ் அறிவித்ததாக தெரிகிறது. ஆனால், தன்னை தலைவர் பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் ராமதாஸிற்கு இல்லை என அன்புமணி தனது அறிக்கையில் தெரிவித்து இருந்தார். இத்தகைய சூழலில் தான், 11 ஆண்டுகளுக்குப் பிறகு பாமக சார்பிலான வன்னிய இளைஞர் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரின் பேச்சு பல்வேறு அரசியல் கேள்விகளை எழுப்பியுள்ளது.
”திருத்திக் கொள்” எச்சரித்த ராமதாஸ்:
மாநாட்டில் பேசிய ராமதாஸ், “பலர் கட்சியில் உழைக்காமல் ஏமாற்றிக்கொண்டிருப்பது எனக்கு தெரியும். இனி அப்படி இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் உங்கள் பொறுப்புகள் உங்களிடம் இருக்காது. எம்எல்ஏ என்றும் பார்க்கமாட்டேன், தூக்கி வங்கக்கடலில் வீசி விடுவேன். சிலர் எங்கே கூட்டணி, யாருடன் கூட்டணி என்று கேட்கிறார்கள். கூட்டணி பற்றி முடிவு செய்வதற்கு நான் இருக்கிறேன், அதை நான் முடிவு செய்வேன். அதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
வெளிப்பேச்சு, வெளிக்கூட்டணி, கட்சிக்குள்ளே கூட்டணி என எதுவும் நடக்காது. எனவே உன்னை நீ திருத்திக்கொள். இல்லை என்றால் உன்னால் இந்தக் கட்சியில் பொறுப்பிலேயே இருக்க முடியாது. உன் பதவிக்கு இளம் சிங்கங்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நீயோ காலை வாறிக்கொண்டிருக்கிறாய். இனி அது நடக்காது. இந்தக் கட்சி தனிப்பட்டவரின் சொத்து அல்ல” என ராமதாஸ் காட்டமாக பேசியிருந்தார்.
அன்புமணிக்கு தான் வார்னிங்?
அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தபோது தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளித்ததில், ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இதில் சிக்கி தனது எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே, அன்புமணி பாஜகவின் கூட்டணியை விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த கட்சியுடன் தொடர்ந்து பயணித்தால் தமிழ்நாட்டில் பாமகவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிடும் என ராமதாஸ் கவலையில் உள்ளாராம். இதன் காரணமாகவே, கூட்டணி முடிவுகளை தானே எடுப்பேன் என மீண்டும், மேடையிலேயே அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளாராம். கட்சிக்குள்ளேயே கூட்டணி என குறிப்பிட்டதன் மூலம், கட்சிக்காக அல்லாமல் அன்புமணிக்காக செயல்படும் திலகபாமா போன்ற நிர்வாகிகளை தான் ராமதாஸ் குறிப்பிடுவதாகவும் தெரிகிறது.
விசிக மீது அட்டாக்:
முன்னதாக மாநாட்டில் பேசிய அன்புமணி, “இளைஞர்களே என் பின்னால் வாருங்கள். உங்களுக்கு நல்ல படிப்பு, வேலைவாய்ப்பை நான் வாங்கித் தருகிறேன். இளைஞர்களை அத்துமீறு என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். படித்து வேலைக்கு போ அதன் பிறகு கட்சிக்கு வா. முதலில் குடும்பத்தை பார், என்னுடைய தம்பிகள் ஒரு வழக்கு கூட வாங்க கூடாது" என பேசியிருந்தார். அன்புமணியின் இந்த பேச்சு விசிக மீதான மறைமுக தாக்குதலாகவே கருதப்படுகிறது. காரணம் சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக, “ அடங்கமறு, அத்துமீறு, திமிறி எழு மற்றும் திருப்பி அடி” என்பது விசிக தலைவர் தொல்.திருமாவளவனின் சூளுரையாகும்.




















