ம.தி.மு.கவின் தலைமைக் கழகச் செயலாளராக வைகோவின் மகன் துரை வையாபுரி நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் இதற்குக் கட்சியின் நிர்வாகிகள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக்கூறப்படுகிறது.


மதிமுகவின் பொதுச்செயலாளராக வைகோ தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் எப்போதும் பரபரப்பாகக் காணப்படுவர். ஆனால் தற்போது உடல்நிலையைக்கருத்தில் கொண்டு  கட்சியில் சிறிது காலம் ஓய்வெடுக்கவுள்ளதால், கட்சியின் நிர்வாகிகள் வேண்டுகோளின் படி வைகோவின் மகன் துரை வையாபுரியை கட்சியின் முக்கியப்பொறுப்பில் சேர்க்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இதற்கு வேண்டாம் என்று மறுத்தப்போதும் நிர்வாகிகள் பலரின் கோரிக்கைகளைத் தற்போது நிறைவேற்றிவுள்ளார். அதன்படி சென்னை எழும்பூரில் உள்ள மதிமுகவின் தலைமைக்கழகமான தாயகத்தில் மாவட்ட செயலாளர்கள், உயர்நிலைக்குழு உறுப்பினர், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துரை வையாபுரிக்கு பதவி கொடுக்கலாமா? அல்லது வேண்டாமா? என்பதுக்குறித்து விவாதம் நடைபெற்றது.





குறிப்பாக கடந்த சட்டமன்றத்தேர்தலில் இருந்தே துரை வையாபுரி கட்சிக்கு வர வேண்டும் என கட்சி நிர்வாகிகள் பலர் தெரிவித்து வந்த நிலையில், கூட்டத்தில் பெரும்பாலோனார் துரை வையாபுரிக்கு ஆதரவு தெரிவித்தனர். இருந்தப்போதும் ரகசிய வாக்கெடுப்பு நடத்திய பின்பு தான் எதுக்குறித்தும் முடிவெடுக்க வேண்டும் என பொதுச்செயலாளர் வைகோ  தெரிவித்துவிட்டார். மேலும் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படாவிடில் கட்சியில் தேவையில்லாத குழப்பம் ஏற்படும் என கூறினார். இதனையடுத்து, `துரை வையாபுரிக்கு அரசியலுக்கு வரலாமா, பதவி கொடுக்கலாமா?' என ஒரு தாளும், `வேண்டாம்' என ஒரு தாளும் கொடுக்கப்பட்டது. அந்தத் தாளை பூர்த்தி செய்துவிட்டு பெட்டியில் நிர்வாகிகள் போட்டனர். முடிவில், 106 பேரில் 104 பேர் துரை வையாபுரிக்கு ஆதரவு வாக்களித்துள்ளனர். ஆனால் ஆதரவு தெரிவிக்காத 2 பேர் யார் எனத் தெரியவில்லை. இருந்தப்போதும் அவர்கள் கை தவறிக்கூட வாக்களித்திருக்கலாம் என கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.


இந்த ரகசிய வாக்கெடுப்புக்குறித்து மாவட்டச்செயலாளர் பேட்ரிக் பேசுகையில், மதிமுகவின் தலைமை கழக செயலாளருக்கான ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் தொடக்ககாலம் முதலே மதிமுக இயக்கத்திற்கு  துரை வரக்கூடாது என்பதில் வைகோ உறுதியாக இருந்தார். ஆனால் கட்சி நிர்வாகிகளின் நிர்பந்தத்தின் பேரில் தான் தற்போது இறுதி முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இந்நிலையில் தான் நேற்று ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றதாகக் கூறினார்.





மேலும் மதிமுகவின் ரகசிய வாக்கெடுப்பில் , அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, மாநில இளைஞரணி செயலாளர் கோவை ஈஸ்வரன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்காத நிலையில், இதுக்குறித்து தற்போது எந்த கேள்விக்கும் பதிலளிக்க முடியாது என ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.. இதனையெல்லாம் பார்க்கும் போது மதிமுகவின் தலைமைக்கழக செயலாளராக துரை வையாபுரி நியமனம் செய்தமைக்கு கட்சி நிர்வாகிகளுக்கிடையே எதிர்ப்புகள் உள்ளது தெரியவருகிறது. இதனை ஆரம்பத்திலேயே சரிசெய்யாவிடில் நிச்சயம் பெரும் பிரச்சனைகள் வெடிக்கும் என்கின்றனர் மதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்.


யார் அந்த இருவர்...!


துரை வையாபுரிக்கு கட்சி பொறுப்பு வழங்க நடந்த மதிமுக நிர்வாகிகள் ஓட்டெடுப்பில், 106 ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டது. அதில் 2 ஓட்டுகள் மட்டும் துரை வையாபுரிக்கு கட்சி பொறுப்பு வழங்க எதிர்ப்பு தெரிவித்து ஓட்டளிக்கப்பட்டிருந்தது. அது யார் என்கிற விபரம் தற்போது வெளியாகியுள்ளது. ஒருவர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மற்றொருவர் கோவை மாநகர மாவட்ட செயலாளர் மோகன்குமார் ஆவர். இவர்கள் இருவர் தான் துரை வையாபுரிக்கு எதிர்ப்பு ஓட்டு பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.