CM Vijay Mekdatu: மத்திய அரசின் நடவடிக்கை மற்றும் எதிர்க்கட்சிகளின் அழுத்தங்களுக்கு மத்தியில், கர்நாடகா செல்லும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் கைவிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Continues below advertisement

கர்நாடகா திட்டம் - மத்திய அரசு நடவடிக்கை:

கர்நாடக அரசு காவிரி ஆற்றில் தமிழ்நாட்டிற்கான நீரை தராமல் வஞ்சிப்பது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் அணையில் நீர் இல்லாமல் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என அம்மாநில அரசு தொடர்ந்து பேசி வருவதும், அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதும் இரு மாநிலங்களுக்கு இடையே பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணையை கட்ட தமிழ்நாட்டின் அனுமதியை பெற வேண்டிய அவசியமில்லை என்ற மத்திய அரசின் பதில் விவசாயிகளிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், கர்நாடக அரசு முன்மொழிந்துள்ள மேகேதாட்டு அணை திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை , காவிரி நீர் தகராறு தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு இணங்காததால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

கர்நாடகா திட்டத்திற்கு நோ சொன்ன மத்திய அரசு

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விக்கு மக்களவையில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய ஜல் சக்தி இணை அமைச்சர் ராஜ் பூஷண் சௌத்ரி, மேகதாது அணை திட்டம் குறித்த மத்திய அரசின் நிலப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். 2018 பிப்ரவரி 16 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, ஒரு மாநிலம் தன் எல்லைக்குள் நீரைப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியாது என்ற போதிலும், அது தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு முரணாக இருக்கக்கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நதிநீர்ப் பகிர்வுத் தீர்ப்பின்படி எல்லைக்குட்பட்ட கட்டுமானங்களுக்குப் பிற மாநிலங்களின் முன் இசைவு பெறுவது குறித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தனியாகக் குறிப்பிடப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கர்நாடக அரசின் திட்டத்தை திருப்பி அனுப்பியதாக கூறியிருந்தாலும், கடைமடை மாநிலங்களின் ஒப்புதலை பெற வேண்டியது அவசியமில்லை என மத்திய அரசு கூறியிருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முரணாக அமைந்துள்ளதாக தமிழக அரசியல் தலைவர்கள் சாடுகின்றனர்.

முதலமைச்சர் பயணத்திற்கு எதிர்ப்பு

இதனிடையே, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகா முதலமைச்சருடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வரு 3ம் தேதி, முதலமைச்சர் விஜய் பெங்களூரு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்தும் நமக்கு சாதகமாக இருக்கும் சூழலில், கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியமற்றது. இது ஒரு தேவையில்லாத பயணம் என தோழமை கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்றவையும் வலியுறுத்தி வருகின்றன. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதும் அதன் மூலம் மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வைப்பதுமே முக்கியம். முதலில் மாநிலத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதையும் படியுங்கள்: TN Weather News: இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? -தமிழக வானிலை அறிக்கை

திட்டத்தை கைவிடுவாரா CM விஜய்:

முதலமைச்சர் விஜய் ஆகஸ்ட் 3ம் தேதி பெங்களூரு செல்வார் என வேளாண் அமைச்சர் வினோத் கூறியிருந்தாலும், மறுநாளே தலைமை இதுகுறித்து முடிவு செய்து அறிவிக்கும் என அரசு தரப்பில் கூறப்பட்டது. கர்நாடகா அரசு தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் சூழலில் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்துவது தமிழகத்திற்கு எந்த பயனும் இருக்காது என்ற எதிர்க்கட்சிகளின் கருத்தையும் முதலமைச்சர் விஜய் பரிசீலித்து வருகிறாராம். இந்த சூழலில் மேகதாது அணை திட்டத்தை மத்திய அரசும் திருப்பி அனுப்பியுள்ளது. இத்தகைய சுழலில் பெங்களூருவிற்கான பயணம் நடைபெறுமா? அல்லது தமிழ்நாட்டில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படுமா? முதலமைச்சர் எடுக்கப்போகும் முடிவுகள் என்ன? என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.