தகுதியுள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகளை கட்டுவதற்கு மத்திய அரசு கடந்த 2015-16 முதல் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை (PMAY) செயல்படுத்தி வருகிறது.
PMAY திட்டம் என்றால் என்ன?
தகுதி வாய்ந்த குடும்பங்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் (PMAY) கீழ், கடந்த 10 ஆண்டுகளில் தகுதியுள்ள ஏழைக் குடும்பங்களுக்கு மொத்தம் 4.21 கோடி வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தை மத்திய, மாநில அரசுகளின் பிற திட்டங்களுடன் இணைப்பதன் மூலம் அனைத்து வீடுகளுக்கும் மற்ற அடிப்படை வசதிகளான வீட்டுக் கழிப்பறைகள், எல்பிஜி இணைப்பு, மின்சார இணைப்பு, குழாய் இணைப்பு போன்றவற்றை செய்து தரப்படுகிறது.
நலிவடைந்த தொழிலாளர்களுக்கும் வீடு வழங்க நடவடிக்கை:
இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள நலிவடைந்த தொழிலாளர்களின் நலனை உறுதி செய்வதற்காக மத்திய அரசு குறிப்பிடத்தக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், பிரதமரின் வீட்டுவசதித் திட்ட (PMAY) பலன்களை பின்தங்கிய தொழிலாளர்களுக்கு விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், கட்டடத் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்கள், நிலக்கரி அல்லாத சுரங்கத் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் பிற அமைப்புசாரா தொழிலாளர்களை வீட்டுவசதி திட்டத்தின் கீழ் சேர்க்க வலியுறுத்தி, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.
தகுதியான பயனாளிகளுக்கு 2 கோடி கூடுதல் வீடுகளை வழங்கும் நோக்கத்துடன், PMAY அமலாக்கத்தை 2024-25 நிதியாண்டு முதல் 2028-29 வரை கூடுதலாக ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய தொழிலாளர்களின் வீட்டுத் தேவைகளை அங்கீகரிக்கிறது.
இந்த தொழிலாளர்கள், சமூகத்தின் பின்தங்கிய பிரிவை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் அவர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது மட்டும் சமூக நீதி அல்ல, மாறாக அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை என்றும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை கணிசமாக மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் நியாயமாக, தகுதியான வீட்டுவசதி மற்றும் சமூக பாதுகாப்பு நலன்களைப் பெறுவதை இந்த திட்டம் உறுதி செய்யும்
இதையும் படிக்க: TVK Vijay : “நடிகர் விஜய் GOATஆ அல்லது FOATஆ”சக்கரவியூகத்தில் நுழையும் த.வெ.க. - நடக்கப்போவது என்ன?