தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மடிக்கணினி திட்டம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இன்று 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இதில், பங்கேற்று பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது,
இந்த மாதிரி முன்னெடுப்புகளால்தான் கல்வி என்றால் தமிழ்நாடு, தமிழ்நாடு என்றால் கல்விதான் என்று சொல்லும் மாநிலமாக பெயர் பெற்று திகழ்கிறது. உலகெங்கும் நம் மாணவர்கள் சாதித்து வருகிறார்கள். தமிழ்நாட்டு அரசுப்பள்ளியில் படித்த பலரும் கூகுள், மைக்ரோப்ட், நாசா ஆகியவற்றில் உயர்ந்த பொறுப்புகளில் இருக்கிறார்கள். இந்த மேடை அதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
கேம் சேஞ்சர்:
தமிழ்நாட்டில் அரசுப்பள்ளியில் படித்து இஸ்ரோ இயக்குனராக உயர்ந்த மயில்சாமி அண்ணாதுரை இங்கே உள்ளார். சந்திராயன், மங்கல்யான்னு பல திட்டங்களை செயல்படுத்திக் காட்டி, ஒட்டுமொத்த இந்திய மாணவர்களுக்கும் மயில்சாமி அண்ணாதுரை ஒரு உத்வேகமாக இருக்கிறார். இப்படி பல மயில்சாமி அண்ணாதுரையை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் நம் முதலமைச்சர் இன்று இந்த மடிக்கணினி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.
இந்த மடிக்கணினியை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் ஒரு கேம் சேஞ்சராக இருக்கும். முழுக்க முழுக்க அலசி ஆராய்ந்து தொழில்துறையில் எது சிறந்தது என்று தேர்வு செய்துதான் முதலமைச்சர் இந்த மடிக்கணினியை தேர்வு செய்துள்ளார்.
திராவிட மாடல்:
நம் திராவிட மாடல் அரசு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் இப்படி பல திட்டங்களை சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வரிசையில் இந்த லேப்டாப் திட்டமும் இணைந்திருக்கிறது.
திராவிட மாடல் அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டில் இருந்து ஐஏஎஸ்,ஐபிஎஸாக மாறுபவர்களின் எண்ணிக்கை இன்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இங்கு வந்திருக்கும் பிரசாந்த் ஐஏஎஸ், இன்பா ஐபிஎஸ் அரசு உருவாக்கியிருக்கிறது. இவர்களைப் போல உங்களில் இருந்து ஏராளமான ஐஏஎஸ், ஐபிஎஸ் உருவாக வேண்டும்.
சாதிக்கலாம்:
இதற்கு இந்த மடிக்கணினி நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும். மைக்ரோசாஃப்ட், பேஸ்புக், எக்ஸ் போன்ற உலகின் பல பெரிய நிறுவனங்கள் எல்லாம் தொடங்கியது ஒரு லேப்டாப்பில்தான். ஒரு மடிக்கணினி, இணைய சேவை, புதிய சிந்தனை இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்க இயலும்.
உலகில் ஏராளமான வாய்ப்புகள் மாணவர்களுக்காக உங்களுக்கு பிறக்கும். உங்கள் தாத்தா, பாட்டியை எடுத்துக் கொண்டால் எத்தனை பேர் பள்ளிக்கு சென்றிருந்தார்கள்? படித்தார்கள்? அப்படி சென்றிருந்தாலும் ஸ்லேட் வாங்க வசதியில்லாமல் மண்ணில் எழுதி படித்தவர்கள் ஏராளம்.
முதலமைச்சர் தயார்:
இன்று தமிழ்நாட்டின் குழந்தைகள் ஸ்மார்ட் வகுப்பில் படிக்கிறார்கள். உங்கள் கைகளுக்கு மடிக்கணினியை முதலமைச்சர் கொடுத்துள்ளார். இதற்கு பெயர்தான் வளர்ச்சி. இதற்கு பெயர்தான் முன்னேற்றம். இதற்கு பெயர்தான் திராவிட மாடல். தமிழ்நாட்டை உயர்த்தி மாடல். இந்த திராவிட மாடல் தொடர மாணவர்களின் அன்பும், ஆதரவும் மிக மிக அவசியம். உங்களுக்காக ஏராளமான திட்டங்களை தர முதலமைச்சர் தயாராக இருக்கிறார்.
கல்விதான் யாராலும் திருட முடியாத, அழிக்க முடியாத, பறிக்க முடியாத சொத்து என்று முதலமைச்சர் அடிக்கடி சொல்வார். படிப்பில்லாமல் வெற்றி பெற்றவர்கள் 100 பேர் இருக்கலாம். படிப்பால் வென்றவர்கள் லட்சம் பேர் இருப்பார்கள். மடிக்கணினி பெறும் மாணவர்கள் கல்வியும், அறிவும் மேலும் மேலும் சிறக்கட்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
