சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதான கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. அந்த வகையில், திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். நேற்று காஞ்சிபுரத்தில் தனது பயணத்தை தொடங்கிய அவர், இன்று செங்கல்பட்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பிறகு பேசிய அவர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் என்ன கூறினார் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
ஏற்கனவே இபிஎஸ் குறித்து பேசியதற்கு விளக்கமளித்த உதயநிதி
தனது 2-வது கட்ட பிரசார சுற்றுப்பயணத்தை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொடங்கியுள்ளார். இந்நிலையில், ஏற்கனவே நேற்று வைத்த விமர்சனத்திற்கு விளக்கமளித்த உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆம்புலன்சில் செல்வார் என்று தான் பேசவில்லை என்று கூறினார். மனிதாபிமானம் உள்ள ஒரு மனிதன் அப்படி பேசுவானா என கேள்வி எழுப்பிய அவர், அதிமுக ஆம்புலன்சில் செல்லும் நிலையில் உள்ளதாகவே பேசியதாகவும், அதிமுக கட்சி ஐசியூ-வில் அனுமதிக்கப்படும்போது, காப்பாற்றும் மருத்துவராக முதலமைச்சர் வருவார் என்று கூறியதாக தெளிவுபடுத்தினார்.
மேலும், எந்த கட்சித் தலைவர் கூட்டம் போட்டாலும், அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் வாகனம் வரத்தான் செய்யும் என்றும், மிகவும் வன்மத்தோடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறார் என குறிப்பிட்டார். ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழிவிடுபவர் தான் உண்மையான தலைவர் என்றும், எடப்பாடி பழனிசாமியால் பாஜகவிடமிருந்து அதிமுக-வை காப்பாற்ற முடியவில்லை என்றும் விமர்சித்தார்.
“அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தொடர வேண்டும்“
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தொடர வேண்டும் என்றும், அதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் செய்யும் ஒரே நல்ல காரியம் என்றும் கூறினார். அப்போது தான் எங்கள் வேலையும் சுலபமாக இருக்கும் என்றும், அதிமுகவினர் இதை ஒப்புக்கொள்வார்களா என்று தெரியாது, ஆனால் நான் முன்மொழிகிறேன், நீங்கள்தான் நிரந்தர பொதுச்செயலாளர் என உதயநிதி கூறினார்.
“சுற்றுப்பயணம் முடிச்சு தனியா பஸ்சுல வந்தாலும் வருவாரு“
மேலும், எடப்பாடி பழனிசாமியின் முதல் ரவுண்டு சுற்றுப்பயணத்தில், பாதி கூட்டணி கட்சிகள் காணாமல் போய்விட்டதாகவும், “இன்று 2-வது ரவுண்டு சென்றிருக்கிறார். திரும்பி வரும்போது, அவர் மட்டும் தனியா பஸ்சுல வந்தாலும் வருவாரு, டிரைவர் கூட இருப்பாரான்னு தெரியலை“ என்று கிண்டலாக விமர்சித்தார் உதயநிதி ஸ்டாலின்.