”ஆளுநரை ஓடவிட்ட முதலமைச்சர்”
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”தமிழ்நாடு சட்டப்பேரவையில் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு சம்பவம் செய்துள்ளார். பொதுவாக தனது பதில்கள் மற்றும் அறிவிப்புகளால் எதிர்க்கட்சிகளை தான் ஓடவிட்டுக் கொண்டிருந்தார். ஆனால் இன்று ஆளுநரையே முதலமைச்சர் ஓடவிட்டுக் கொண்டிருக்கிறார். அத்தகைய முதலமைச்சர் தமிழகத்திற்கு கிடைத்துள்ளார். அவர் தினமும் மக்களுக்கான பணிகளையும், திட்டங்களையும் கொண்டு வருகிறார். அதேநேரம் நமது உரிமைகள் பறிபோனால் குரல் கொடுக்கும் இந்தியாவிலேயே நம்பர் ஒன் முதலமைச்சர் என்றால் அது ஸ்டாலின் தான்” என தெரிவித்துள்ளார்.
உதயநிதி டிவீட்:
முன்னதாக, தமிழ்நாடு அரசு தயாரித்து தானும் இசைவளித்த உரையை முறையாக வாசிக்காத ஆளுநரின் மரபு மீறலுக்கு எதிராக,அரசு தயாரித்த உரை மட்டுமே அவைக்குறிப்பில் ஏறவேண்டுமென,முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டமன்ற மரபைகாத்த முதலமைச்சருக்கு நன்றி என, தனது டிவிட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் உரை:
முன்னதாக, தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. அப்போது, ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசு தயாரித்து வழங்கிய ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த பல்வேறு கருத்துக்களை வாசிக்காமல் தவிர்த்தது தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆளுநரின் செயலைக் கண்டித்து சட்டசபையில் அங்கம் வகித்த தி.மு.க. கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் உரை:
ஆளுநரின் உரையை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நம்முடைய திராவிட மாடல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக செயல்பட்டு வரும் ஆளுநர் அவர்களுடைய செயல்பாடுகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில், அரசின் சார்பாக இருக்கின்ற காரணத்தால், நாங்கள் சட்டமன்றப் பேரவை விதிகளைப் பின்பற்றி ஆளுநர் உரையைத் தொடங்குவதற்கு முன்னர் எங்களது எதிர்ப்பு எதனையும் நாங்கள் பதிவு செய்யவில்லை.
பேரவையிலே மிகவும் கண்ணியத்தோடு, அரசமைப்புச் சட்டத்தின்கீழ் உரையாற்ற வந்துள்ள ஆளுநர் அவர்களுக்கு முழு மரியாதை அளிக்கும் வகையில் நாங்கள் நடந்து கொண்டோம் ஆனாலும், எங்களது கொள்கைகளுக்கு மாறாக மட்டுமல்ல.
அரசின் கொள்கைகளுக்கே கூட அவர் மாறாக நடந்து கொண்டு தமிழ்நாடு அரசு தயாரித்து, ஆளுநர் அவர்களால் இசைவளிக்கப்பட்டு, அச்சிடப்பட்ட உரையை முறையாக முழுமையாகப் படிக்காதது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல சட்டமன்ற மரபுகளை மீறிய ஒன்றும் ஆகும்.
ஆகவே சட்டமன்றப் பேரவை விதி 17-ஐத் தளர்த்தி இன்றைக்கு அச்சிடப்பட்டு, உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில உரை மற்றும் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியன மட்டும் அவைக்குறிப்பில் ஏற வேண்டும் எனும் தீர்மானத்தையும்,
ஆளுநர் வெளிநடப்பு:
அதேபோல இங்கே அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக ஆளுநர் அவர்கள் இணைத்து விடுத்து படித்த பகுதிகள் இடம்பெறாது என்னும் தீர்வனத்தையும் முன்மொழிகிறேன். இத்தீர்மானத்தை பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசினார். இதனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோதே ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபையில் இருந்து பாதியில் வெளியேறிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான், ஆளுநரையே முதலமைச்சர் ஸ்டாலின் ஓடவிட்டதாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.