Udhayanidhi Arrest: முதலமைச்சர் விஜய் தொடர்பாக அநாகரீகமாக பேசியதாக, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அநாகரீக பேச்சு? - உதயநிதி கைது
தஞ்சாவூரில் நேற்று நடந்த திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்களை இழிவு படுத்தும் வகையில் பேசியதாக, திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தவெக மகளிர் அணியினர் கொடுத்த புகாரின் பேரில் தஞ்சாவூர் கிழக்கு போலீசில் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய தஞ்சாவூர் டிஎஸ்பி அழகேசன், கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்டோர், சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு வந்து கைது செய்தனர். தொடர்ந்து சாலை மார்க்கமாக அவர் தஞ்சாவூருக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அதேநேரம் தனது பேச்சு தவறுதலாக திரித்து பரப்பப்பட்டு வருவதாக உதயநிதி விளக்கமளித்துள்ளார். அவரது கைதை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில், உதயநிதி பேசியதற்கு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
”வீட்டில் போட்டு காட்டுங்க” - நிர்மல் குமார்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “ உதயநிதி ஸ்டாலின் என்ன பேசினார் என அனைவரும் பார்த்தோம். திமுகவினர் ஏராளமானோர் உள்ளனர். அவர்களது தலைவர் பேசியதை தங்களது வீட்டில் போட்டு காட்ட வேண்டும். உதயநிதி பேசியதை ஏற்புடையதாக இருக்கிறதா என்பதை அவர்கள் சொல்ல வேண்டும். இவ்வளவு கீழ்தரமாகவும், கேவலமாகவும் பேச வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. காவிரி மற்றும் மேகதாது விவகாரம் தொடர்பாக தானே பேச சென்றீர்கள். அதுகுறித்து தெரியாவிட்டால் தெரிந்ததை பேசிவிட்டு வரவேண்டியது தானே. இல்லையென்றால் காகிதத்தில் கொடுப்பதை மட்டுமே பேச வேண்டியது தானே. தேவையில்லாமல் அவதூறாக பெண்களை பற்றி ஆபாசமாக பேச வேண்டியது ஏன்? ஏதாவது ஒரு பிரச்னை என்றால் பெண்களை பற்றி தனிப்பட்ட முறையிலும், ஆபாசமாகவும் பேசுவதே திமுகவினருக்கு வேலையாகிவிட்டது. இதை எந்த காலத்திலும் ஏற்க முடியாது. காவல்துறைக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஜெயலலிதா பாணியில் நடவடிக்கை
எதிர்க்கட்சி தலைவராக அல்ல சட்டமன்ற உறுப்பினராகக் கூட உதயநிதிக்கு தகுதி இல்லை. இவ்வளவு வக்கிரம் மனதில் இருக்கிறது என்றால், ஆட்சியில் இருந்தபோது எவ்வளவு வக்கிரமாக திரைமறைவில் செயல்பட்டு இருப்பார்கள். இத்தகைய விஷயத்தை பொதுவெளியில் எதிர்க்கட்சி தலைவரே பேசினால் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும்” என பதிலளித்தார்ல். தொடர்ந்து தவெக அரசு அதை மறைப்பதற்காக உதயநிதி கைது செய்யப்பட்டுள்ளார் என எடப்பாடி பழனிசாமி கூறியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிகையில், “முந்தைய காலங்களில் ஜெயலலிதா இருந்து இருந்தால் என்ன நடவடிக்கை எடுத்து இருப்பாரோ, அதையே தான் அண்ணன் விஜய் செய்து இருக்கிறார். எடப்பாடி தான் பொய்க்கால் குதிரை போல திமுகவின் பின்னே சென்று ஒளிந்துகொள்கிறார். திமுக பேச வேண்டியதை திமுகவிற்கு முன்னதாகவே எடப்பாடி பேசுகிறார். உதயநிதி சொன்ன கருத்தில் எடப்பாடிக்கு ஏற்பு உள்ளதா? அதிமுகவை படுகுழுயில் தள்ளியது எடப்பாடி தான். ஜெயலலிதா குறித்து உதயநிதி அவதூறாக பேசியபோதே, அப்போது ஆட்சியில் இருந்த எடப்பாடி நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். ஆனால் இப்போது நேர்மையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என நிர்மல் குமார் பதிலளித்துள்ளார்.
