தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆண்டுதோறும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு விழா நடத்தப்பட்டு கல்வி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கல்வி விருதுகளை நடிகரும், தவெக தலைவருமான விஜய் வழங்கி சிறப்பித்து வருகிறார்.
கல்வி விருது வழங்கும் விழா:
10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சமீபத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வரும் 30ம் தேதி ( வெள்ளிக்கிழமை) கல்வி விருது வழங்கும் விழா நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டள்ள அறிவிப்பில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது. இந்த பொதுத்தேர்வுகளில் தொகுதி வாரியாகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவச் செல்வங்களைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நேரில் அழைத்து பாராட்ட உள்ளார். முதற்கட்டமாக, வரும் 30ம் தேதி வெள்ளிக்கிழமை நாளில் மாமல்லபுரத்தில் உள்ள 4 பாயிண்ட்ஸ் ஷெர்ட்டன் ஹோட்டலில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.
88 தொகுதிகள்:
இந்த பாராட்டு விழாவில் பின்வரும் மாவட்டங்களில், குறிப்பிட்டுள்ள சட்டமன்ற தொகுதிளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டுகளை பெறுகிறார்கள்.
அரியலூர், ஜெயங்கொண்டம், அரக்கோணம் ( தனி), சோளிங்கர் ஆற்காடு, ராணிப்பேட்டை, கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, காட்டுமன்னார்கோயில் (தனி) உள்பட 88 தொகுதியில் உள்ள மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.
மாணவர்கள் மீதும், இளைஞர்கள் மீதும் தனிப்பட்ட முறையில் அன்பும், அக்கறையும் கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இந்த பாராட்டு விழாவில் மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையுடன் சான்றிதழும், ஊக்கத்தொகையும் வழங்கி கவுரவிக்க உள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார்.
இந்த கல்வி விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் பல்வேறு சில முக்கிய அரசியல் கருத்துக்களையும் தெரிவிப்பார் என்றே கருதப்படுகிறது. அதேசமயம் மாணவர்களின் கல்வி விழா என்பதால் விஜய் பெரியளவில் அரசியல் குறித்து பேசவும் மாட்டார் என்றே கணிக்கப்படுகிறது. ஏனென்றால், அவர் கடந்த 2 ஆண்டுகளாக நடந்த கல்வி விருது வழங்கும் விழாவில் விஜய் அரசியல் குறித்த கருத்துக்களை தவிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.