TVK Stampede Death: 29 பேர் உயிரிழப்பா? சோகத்தில் முடிந்த விஜய்யின் பரப்புரை - கவலையில் கரூர்
கரூரில் தவெக தலைவர் விஜய்யை காண்பதற்காக பல்லாயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் குவிந்ததில் 29 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கரூரில் இன்று நடிகர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். நாமக்கல் சுற்றுப்பயணத்தை முடித்து கரூரில் பரப்புரையை மேற்கொண்டார். இந்த நிலையில், விஜய்யை காண பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்.
29 பேர்:
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் மயங்கியும், மூச்சுத்திணறியும் விழுந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது பொதுமக்கள் மத்தியிலும், தவெக-வினர் மத்தியிலும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. தற்போது வரை 29 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
ஆயிரக்கணக்கில் குவிந்த தொண்டர்கள்:
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தலுக்காக விஜய் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். ஒவ்வொரு சனிக்கிழமையும் அவர் பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று நாமக்கல்லில் பரப்புரையை முடித்து விட்டு அவர் கரூரில் பரப்புரை மேற்கொண்டார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் அவர் பரப்புரை மேற்கொண்டார். மிகவும் நெருக்கடியான பகுதியாக கருதப்படும் இந்த பகுதியில் விஜய்யை காண்பதற்காக காலை முதலே தொண்டர்கள் காத்திருந்தனர்.
உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம்:
மாலை நேரம் என்பதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் குவிந்தனர். தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமான விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இதையடுத்து, அவரை காண்பதற்காக குழந்தைகள், பெரியவர்கள், இளைஞர்கள் என பலரும் குவிந்தனர்.
குழந்தைகள், வயதானவர்கள் வீட்டில் இருந்தபடியே பரப்புரையை காணுமாறு விஜய் வலியுறுத்திய நிலையில், அவரைப் பார்க்கும் ஆர்வத்தில் பலரும் குவிந்தனர். மிகவும் சாதாரண சாலையில் ஆயிரக்கணக்கனோர் குவிந்ததால் பலருக்கும் மூச்சுத்திணறலும், மயக்கமும் உண்டாகியது.

மயங்கிய பலரையும் ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு சென்ற நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் தற்போது வரை 29 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், 20 பேர் வரை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் 3 பேர் சிறுமிகள் என்று கூறப்படுகிறது. இந்த சோக சம்பவத்தால் ஒட்டுமொத்த தமிழகமும் சோகம் அடைந்துள்ளது. இந்த உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
மரண ஓலங்கள்:
சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர், முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, எம்ஆர் விஜயபாஸ்கர் விரைந்து சென்றுள்ளனர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சோக சம்பவத்தால் கரூர் அரசு மருத்துவமனையில் அழுகுரலும், மரண ஓலங்களும் தொடர்ந்து கேட்டு வருகிறது. மருத்துவமனையில் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்களும், குடும்பத்தினரும் குவிந்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், சம்பவ இடத்திற்கு நேரில் செல்ல அமைச்சர்கள் அன்பில் மகேஷ் மற்றும் மா.சுப்பிரமணியத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.





















